சித்ரதுர்காவில் காதல் கலப்பு திருமணம் செய்தமாற்றுத்திறனாளி தம்பதி கிராமத்திற்குள் நுழைய அனுமதி


சித்ரதுர்காவில் காதல் கலப்பு திருமணம் செய்தமாற்றுத்திறனாளி தம்பதி கிராமத்திற்குள் நுழைய அனுமதி
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்காவில் காதல் கலப்பு திருமணம் செய்த மாற்றுத்திறனாளி தம்பதியை கிராமத்திற்குள் நுழைய அனுமதி கிடைத்தது.

சித்ரதுர்கா:-

காதல் கலப்பு திருமணம்

சித்ரதுர்கா மாவட்டம் ெசல்லகெரே தாலுகா தேவரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாவித்திரி. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது கணவர் மணிகண்டன். ஆந்திராவை சேர்ந்தவர். இவரும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இதனால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இவர்கள் 2 பேரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை தேவரஹள்ளி கிராமத்திற்கு வருவதற்கு திட்டமிட்டனர். இதற்கு சாவித்திரியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தாலும், ஊர் பெரியவர்கள் தம்பதியை ஏற்கவில்லை. மேலும் கிராமத்திற்கு அழைத்து வர முயற்சித்ததாக கூறி சாவித்திரியின் பெற்றோருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று ஊர் பெரியவர்கள் உத்தரவிட்டனர்.

கிராமத்திற்குள் நுழைய அனுமதி கிடைத்தது

இதனால் அதிருப்தியடைந்த தம்பதி நேற்று முன்தினம் செல்லகெரே தாசில்தார் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். மேலும் தேவரஹள்ளி கிராமத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட தாசில்தார் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் தேவரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று சாவித்திரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கணவர் அவரை சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்தநிலையில் தாசில்தார் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் சாவித்திரியின் சமூகத்தை சேர்ந்த பெரியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் தம்பதியை கிராமத்திற்குள் நுழைய அனுமதி வழங்குவதாக கூறினர். இதையடுத்து தம்பதி நிம்மதி அடைந்தனர். மேலும் சிகிச்சை முடிந்து அவர்கள் தேவரஹள்ளி கிராமத்திற்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.


Next Story