10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் சாவு
பெல்தங்கடியில் 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மங்களூரு:-
10-ம் வகுப்பு மாணவி
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா கணியூர் அருகே கஜேமானே கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவரது மகள் அபிபா (வயது 16). இவர் கெருகத்தே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அபிபாவை அப்துல் ரசாக் பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி சென்றார்.
இந்த நிலையில் அபிபா, பள்ளிக்கு அருகே கலியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழிவறையை பயன்படுத்தினார். இந்த நிலையில் கழிவறைக்கு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
மாரடைப்பால் சாவு
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது கழிவறையில் அபிபா, தரையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து மேலும் அதிர்ந்துபோன அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அபிபாவை மீட்டு சிகிச்சைக்காக பெல்தங்கடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் ெபல்தங்கடி போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். அபிபாவின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிர்ச்சி
கர்நாடகத்தில் சமீபகாலமாக மாரடைப்பால் பள்ளி மாணவ-மாணவிகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்க வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.