ஏரிகளை மாசுப்படுத்திய 112 தொழிற்சாலைகள் மூடல்
கடந்த 12 ஆண்டுகளில் ஏரிகளை மாசுப்படுத்திய 112 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
பெங்களூருவுக்கு ஆயிரம் ஏரிகளின் நகரம் என்ற சிறப்பு பெயர் உண்டு. அதற்கு ஏற்றபடி பெங்களூருவில் பெல்லந்தூர், அல்சூர், வர்த்தூர் உள்பட ஏராளமான ஏரிகள் உள்ளன. அந்த ஏரிகளை மாநகராட்சி நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் ஏரிகளில் கழிவுநீர் கலந்ததாக கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவின் அடிப்படையில் இந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெங்களூருவில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலக்கப்பட்டு வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் நடக்கிறது. இதுகுறித்து எழுந்த புகார்களின் பேரில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏரிகளில் சட்டவிரோதமாக கழிவுகள் கலக்கப்பட்டது தெரிந்தது. குறிப்பாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் நேரடியாக ஏரிகளை சென்றடைந்தது. இதனால் ஏரி பகுதியில் துர்நாற்றம் வீசி இருந்தது. இந்த நிலையில் ஏரிகளில் மாசு ஏற்படுத்திய 112 தொழிற்சாலைகள் கடந்த 12 ஆண்டுகளில் மூடப்பட்டுள்ளது. இதில் பொம்மனஹள்ளி பகுதியில் 46 தொழிற்சாலைகள், ஆர்.ஆர்.நகரில் 18 மற்றும் தாசரஹள்ளியில் 17 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பெங்களூருவில் உள்ள மற்ற தொழிற்சாலைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வு முடிவுகள் அடிப்படையில் ஆலைகள் மூடப்படும். அரசு விதிகளை மீறும் ஆலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 2 தொழிற்சாலைகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.