ஜனதா தளம்(எஸ்) கூட்டத்தை சி.எம்.இப்ராகிம் புறக்கணித்தார்


ஜனதா தளம்(எஸ்) கூட்டத்தை சி.எம்.இப்ராகிம் புறக்கணித்தார்
x
தினத்தந்தி 2 Oct 2023 12:15 AM IST (Updated: 2 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமாரசாமி கூட்டிய ஜனதா தளம்(எஸ்) கட்சியின் கூட்டத்தை அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் புறக்கணித்தார்.

பெங்களூரு:-

கூண்டோடு ராஜினாமா

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியை ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமலும், அவரது ஒப்புதல் இல்லாமலும் குமாரசாமி டெல்லிக்கு சென்று பா.ஜனதா தலைவர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சி.எம்.இப்ராகிம், 'எதனக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் குமாரசாமி கூட்டணியை உறுதி செய்துள்ளார். முன்கூட்டியே என்னுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. அதனால் எனது முடிவு என்ன என்பதை வருகிற 16-ந் தேதி அறிவிப்பேன்' என்று கூறியுள்ளார். மேலும்

அக்கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுபற்றி கருத்து கூறிய குமாரசாமி, முஸ்லிம் சமூகத்தை நம்பி எங்கள் கட்சி இல்லை என்று கூறினார்.

காங்கிரசில் சேருவார்

இந்த நிலையில் குமாரசாமி தலைமையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு அருகே பிடதியில் உள்ள குமாரசாமியின் பண்ணை வீட்டில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ளுமாறு சி.எம்.இப்ராகிமை தேவேகவுடா தொலைபேசியில் அழைத்து பேசி கேட்டுக் கொண்டார். இதை அவர் ஏற்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் குமாரசாமி கூட்டிய கூட்டத்தை மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் புறக்கணித்துள்ளார். அவர் விரைவில் மீண்டும் காங்கிரசில் சேருவார் என்று எதிர்பாா்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவராக இருந்த எச்.விஸ்வநாத் எம்.எல்.சி., திடீரென பா.ஜனதாவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story