கூட்டுறவு சங்கத்தில் பெண் ஊழியர் தற்கொலை கள்ளக்காதலன் கைது


கூட்டுறவு சங்கத்தில் பெண் ஊழியர் தற்கொலை கள்ளக்காதலன் கைது
x

கூட்டுறவு சங்கத்தில் பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கள்ளக்காதலனான மாநகராட்சி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சிவமொக்கா-

பெண் ஊழியர் தற்கொலை

சிவமொக்கா டவுன் ஜி.எஸ்.கே.எம். சாலை பகுதியில் வசித்து வந்தவர் அனிதா (வயது 32). இவர் சிவமொக்கா கார்டன் பகுதியில் உள்ள மகளிர் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி மதிய உணவு இடைவேளையின்போது, சக ஊழியர்கள் யாரும் இல்லாத நேரத்தில் அலுவலகத்தில் வைத்து அனிதா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

உல்லாசம் அனுபவித்து...

அதாவது, மகளிர் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக வேலை பார்த்து வந்த அனிதாவின் கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில், அனிதாவுக்கும் சிவமொக்கா மாநகராட்சியில் டிரைவராக வேலை பார்த்து வரும் நாகேந்திரா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நாகேந்திரா, அனிதாவை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அனிதா, நாகேந்திராவிடம் வற்புறுத்தி உள்ளார். ஆனால் அனிதாவுக்கு ஏற்கனவே திருமணமானதை காரணம் காட்டி அவரை திருமணம் செய்ய நாகேந்திரா மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அனிதா, கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

கைது

இதற்கிடையே அனிதா, கைப்பட எழுதிய கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது. அதில், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னுடன் நெருக்கமாக பழகி நாகேந்திரா ஏமாற்றி விட்டதாகவும், இதனால் தற்கொலை செய்துகொள்வதாகவும் எழுதி இருந்தார்.

இதையடுத்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி டிரைவர் நாகேந்திராவை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story