நிலக்கரி சுரங்க விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கையை முதல்-அமைச்சர் மேற்கொள்வார் - திருச்சி சிவா


நிலக்கரி சுரங்க விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கையை முதல்-அமைச்சர் மேற்கொள்வார் - திருச்சி சிவா
x

கோப்புப்படம்

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை முதல்-அமைச்சர் மேற்கொள்வார் என டெல்லியில் திருச்சி சிவா தெரிவித்தார்.

புதுடெல்லி,

மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நியாயமான கோரிக்கையைத்தான் வைத்துள்ளன. உண்மையை கண்டறிய நாடாளுமன்ற கூட்டுக்குழு வேண்டும் என்கிறார்கள். கடந்தகாலங்களில் சில பிரச்சினைகளுக்கு இதுபோன்று குழு அமைக்கப்பட்டு உள்ளது. அரசு பிடிவாதமாக இருக்கும் நிலையில், எங்களின் நிலை போராட வேண்டித்தான் உள்ளது. நாடாளுமன்றத்தில் இதற்கு முன்பு ஒருமாதம்கூட அவை நடைபெறாமல் இருந்துள்ளது. எனவே இது புதிது அல்ல.

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார். நாங்கள் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.

மாநில சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களை கவர்னர் நீண்டகாலம் வைத்திருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் வைத்திருக்க முடியும். பிறகு, மறுக்கிறேன் என்று சொல்ல வேண்டும். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு விரோத சட்டங்களை இயற்றாது. அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்பவே சட்டங்கள் இயற்றப்படும். அதற்கு இசைவு தரவேண்டியது கவர்னரின் கடமை. மாறாக அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவது, சட்டசபை மாண்புகளை மீறுவது என்பதெல்லாம் அவரது வரம்பு மீறிய செயலையே காட்டுகிறது என்று அவர் கூறினார்.


Next Story