கல்லூரி மாணவர் மர்மசாவு


கல்லூரி மாணவர் மர்மசாவு
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்ததற்கு பெண் விவகாரம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹெண்ணூர்:-

பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கல்யாண் நகர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மர்வேஷ்(வயது 19) என்ற மாணவர் பி.காம் படித்து வந்தார். இந்த நிலையில் மர்வேசுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவரது நண்பர்கள் அவரை உடனடியாக மீட்டு அம்பேத்கர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடனடியாக ஹெண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது மாணவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அவரது நண்பர்கள் கூறினர்.

இதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் விவகாரத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருக்கலாம் எனவும், அப்போது நடந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் பெங்களூருவில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிந்த விவகாரம் அடங்குவதற்குள், மற்றொரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story