ஆன்லைன் நூலகம் வரப்பிரசாதமா? கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் கருத்து
ஆன்-லைன் நூலகம் வரப்பிரசாதமா? இல்லையா என்பது குறித்து முதியவர்கள், மாணவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
மாநில மத்திய நூலகம்
பெங்களூரு நகரின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுவது மாநில மத்திய நூலகம். இந்த நூலகம் கப்பன் பூங்கா வளாகத்திற்குள் அமைந்து உள்ளது. இந்த நூலகம் கடந்த 1908-ம் ஆண்டு கட்டப்பட்டது. 1883-ம் ஆண்டு முதல் 1901-ம் ஆண்டு வரை மைசூரு மாகாணத்தின் திவானாக இருந்த சேஷாத்திரி அய்யரின் பெயர் இந்த நூலகத்திற்கு முதலில் சூட்டப்பட்டு இருந்தது. கடந்த 1915-ம் ஆண்டு 215 உறுப்பினர்கள், 4,750 புத்தங்களுடன் இந்த நூலகம் திறக்கப்பட்டு இருந்தது.
இதன்பின்னர் கடந்த 1966-ம் ஆண்டு இந்த நூலகத்தை கர்நாடக அரசு வசப்படுத்தி கொண்டது. இதனை தொடர்ந்து இந்த நூலகம் 1986-ம் ஆண்டு மாநில நூலகமாக மாற்றப்பட்டது. தற்போது இந்த நூலகம் கர்நாடக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் விதான சவுதா அருகேயும், கப்பன் பூங்காவிற்குள்ளும் அமைந்து இருப்பதால் தினமும் நூலகத்திற்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.
இணையமயமாக்கம்
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை உலக மக்களை ஆட்டிபடைத்து வரும் கொரோனா காரணமாக ஊரடங்கு உள்பட பல்வேறு காரணங்களால் பெங்களூரு மத்திய நூலகத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்தது. தற்போது கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்த நிலையில் நூலகத்திற்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்து உள்ளது. இதற்கிடையே நூலகத்திற்கு வந்து புத்தகங்களை படிக்க முடியாதவர்கள், புத்தகங்களை செல்போனில் படிக்கும் வசதியாக பெங்களூரு மத்திய நூலகம் ஆன்-லைன் மயமாக்கப்பட்டு உள்ளது.
அதாவது நூலகத்திற்கு வந்து புத்தகங்களை வாசிப்பவர்கள் இனி செல்போன்களில் புத்தகத்தை வாசிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வசதியை பெற கர்நாடக டிஜிட்டல் பப்ளிக் நூலகம் என்ற இணையதள முகவரியில் சென்று பதிவு செய்ய வேண்டும். அந்த இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் நாம் விரும்பும் நூலகம், நமக்கு வேண்டிய புத்தகங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இணையதளம் மூலம் மாநில மத்திய நூலகத்தில் 2 கோடியே 81 லட்சம் பேர் வாசகர்களாக உள்ளனர்.
கண் பார்வையில் பாதிப்பு
100 ஆண்டுகளை கடந்து உள்ள நிலையில் நூலகம் ஆன்லைனாக மாற்றப்பட்டதற்கு பெரும்பாலோனோர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் முதியவர்கள் சிலர் நூலகம் இணையமயமாக்கப்பட்டதற்கு தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதுபற்றி வாசகர்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-
பெங்களூரு சம்பங்கிராம்நகரில் வசித்து வரும் சுப்பையா என்ற முதியவர் கூறும்போது, "தற்போது உள்ள நவீன காலத்தில் நூலகம் ஆன்-லைன் மயமாக்கப்பட்டது வரவேற்கத்தக்கது தான். ஆனால் முதியவர்களுக்கு செல்போனில் காவியங்கள், இலக்கியங்கள் மற்றும் நாளிதழ்களை படிப்பதில் சிரமம் உள்ளது. செல்போனில் வரும் புத்தகங்களை கூர்ந்து படிக்க வேண்டி உள்ளது. இதனால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நான் நூலகத்திற்கு சென்று தான் புத்தகங்கள், செய்தித்தாள்களை படித்து வருகிறேன். நூலகத்தில் இருக்கும் அமைதி வேறு எங்கும் கிடைப்பது இல்லை. நூலகத்திற்கு சென்று புத்தகங்களை வாசிப்பது தான் மனநிறைவை தருகிறது" என்றார்.
ஒரு அனுபவம்
சம்பங்கிராம்நகரில் வசித்து வரும் சுப்புலட்சுமி என்ற மூதாட்டி கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் நூலகத்திற்கு சென்று தான் கதை புத்தகங்கள், வரலாற்று புத்தகங்களை படித்து வருகிறேன். நூலகம் ஆன்லைன் மயமாக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அது பற்றி எனக்கு தெரியாது.
நூலகத்திற்கு சென்று தோழிகளுடன் இணைந்து புத்தகங்கள் படிப்பதை வார்த்தையில் சொல்லி விட முடியாது. அது ஒரு அனுபவம். நூலகத்திற்கு தற்போதும் மவுசு குறையவில்லை. அங்கு வருபவர்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறார்கள்" என்று கூறினார்.
நேரம் மிச்சமாகிறது
பெங்களூரு எஸ்.ஜி.பாளையாவில் வசித்து வரும் ராகவ் என்ற கல்லூரி மாணவர் கூறுகையில், "நூலகம் இணையமாக்கப்பட்டத்தை நான் வரவேற்கிறேன். செல்போன்களில் புத்தகங்கள் கிடைப்பதால் நூலகத்திற்கு செல்ல வேண்டியது இல்லை. வீட்டில் இருந்தே புத்தகங்களை படித்து விடலாம். நமக்கு நேரமும் மிச்சம் ஆகும். நூலகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தால் நின்று கொண்டே புத்தகங்களை படிக்கும் நிலையும் வருகிறது. கையில் புத்தகம் கிடைக்கும் போது நூலகத்தை தேடி எதற்காக செல்ல வேண்டும்?" என்றார்.
சாம்ராஜ்பேட்டையில் வசிக்கும் ஐஸ்வர்யா என்ற கல்லூரி மாணவி கூறுகையில், "கல்லூரி முடிந்ததும் நூலகத்திற்கு சென்று புத்தகங்களை எடுத்து வந்து படித்தேன். தற்போது நூலகம் இணையமயமாக்கப்பட்டு இருப்பதால் செல்போன் மூலம் நாம் விரும்பும் புத்தகத்தை படித்து விடலாம். நாம் விரும்பும் புத்தகங்களை செல்போனில் படிப்பது சவுகரியமாக உள்ளது. நூலகத்தை இணையமயமாக்கிய நல்ல திட்டம் என்று நான் கருதுகிறேன்" என்றார்.
ஆன்லைன் நூலகம் என்பது நாகரிக வளர்ச்சிக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான். ஆனால் ஆன்லைனில் நூல்களை மணிக்கணக்கில் வாசிப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் மறுக்க முடியாது என்பது வாசகர்கள் சிலரின் கருத்தாக உள்ளது.
மத்திய மாநில நூலகத்தில் போட்டி தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தேவையான புத்தகங்களும் உள்ளன. அந்த நூலகத்திற்கு வந்து படிப்பவர்கள் கூறும்போது, போட்டி தேர்வுக்கு படிக்கும் போது எந்தவித இடையூறும் இன்றி படிக்க வேண்டும். அப்போது தான் நாம் படித்தது மனதில் நிற்கும். வீட்டில் இருந்து செல்போனில் படித்தால் அது சரியாக இருக்காது. நூலகத்திற்கு வந்து அங்கு நிலவும் அமைதியான சூழலில் படிக்க வேண்டும்.
மத்திய மாநில நூலகத்தில் அனைத்து வித போட்டி தேர்வு புத்தகங்களும் கிடைக்கின்றன. அங்கு அமைதியான சூழல் நிலவுகிறது. நூலகத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் வரலாம். செல்போனில் படித்தால் போதும் என்று நினைப்பவர்கள் வீட்டிலேயே இருக்கலாம். அதுபற்றி நாம் ஒன்றும் கூற முடியாது என்றனர்.
போட்டி தேர்வுக்கு படிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?