சிவமொக்காவில் கஞ்சா புகைத்து சாலையில் தள்ளாடிய கல்லூரி மாணவர்கள்
சிவமொக்காவில் கஞ்சா புகைத்து சாலையில் தள்ளாடிய கல்லூரி மாணவர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சிவமொக்கா;
சிவமொக்கா டவுன் சாகர் சாலையில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மது குடித்துவிட்டு, கஞ்சா புகைத்துக் கொண்டு சாலையில் தள்ளாடியபடி நடந்து சென்று கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்த பலரும் முகம் சுழித்தனர். பலர் அவர்களை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. மேலும் அந்த மாணவர்கள் கல்லூரி பஸ்சில் ஏற முயன்றனர். அப்போது அவர்களை கல்லூரி காவலாளிகள் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் இதுபற்றி கல்லூரி நிர்வாகத்துக்கு தெரியவந்தது. அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை நேரில் அழைத்து நடந்த விவரத்தை கூறி கண்டித்தனர். பின்னர் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அவர்களை அவர்களுடைய பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.