ராமநகரில் முழு அடைப்பு போராட்டம் -கடைகள் அடைப்பு-தனியார் பள்ளிகள் மூடல்


ராமநகரில் முழு அடைப்பு போராட்டம் -கடைகள் அடைப்பு-தனியார் பள்ளிகள் மூடல்
x

மருத்துவ கல்லூரி இடமாற்றத்தை கண்டித்து ராமநகரில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, கடைகள், மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டதுடன், தனியார் பள்ளிகளும் மூடப்பட்டு இருந்தது.

ராமநகர்:-

மருத்துவ கல்லூரி இடமாற்றம்

ராமநகர் மாவட்டம் டவுனில் ராஜீவ்காந்தி மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. பின்னர் ராமநகர் டவுனுக்கு பதிலாக, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவுக்கு அந்த மருத்துவ கல்லூரி மாற்றப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கு, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. தான் காரணம் என்று ராமநகர் மக்கள் குற்றச்சாட்டு கூறினார்கள்.

அதே நேரத்தில் ராமநகரில் இருந்து மருத்துவ கல்லூரி இடமாற்றத்தை கண்டித்து கெங்கல் அனுமந்தய்யா மருத்துவ கல்லூரி போராட்ட குழு சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்ததுடன், செப்டம்பர் 8-ந் தேதி (அதாவது நேற்று) ராமநகரில் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதற்கு பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் ஆதரவு அளித்திருந்தது.

முழுஅடைப்பு

அத்துடன் விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகளும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். நேற்று முன்தினம் ராமநகரில் நடந்த பாதயாத்திரையின் போது கனகபுரா மற்றும் ராமநகரிலும் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்து இருந்தார். ஆனால் திட்டமிட்டபடி முழு அடைப்பு நடைபெறும் என்று போராட்ட குழுவினர் அறிவித்து இருந்தார்கள்.

அதே நேரத்தில் முழு அடைப்புக்கு அனுமதி கிடையாது என்று ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டியும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மருத்துவ கல்லூரி இடமாற்றத்தை கண்டித்து நேற்று ராமநகரில் திட்டமிட்டபடி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்திருந்தார்கள்.

தனியார் பள்ளிகள் மூடல்

பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டுமே திறந்திருந்தது. ராமநகர் டவுன், புறநகர் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால், வெறிச்சோடி காணப்பட்டது. ஓட்டல்களும் அடைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக ராமநகரில் உள்ள ஏ.பி.எம்.சி. மார்க்கெட், பட்டு மார்க்கெட்டும் நேற்று மூடப்பட்டு இருந்தது. தள்ளுவண்டி வியாபாரிகள் கூட முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து வியாபாரத்தில் ஈடுபடவில்லை.

ராமநகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு இருந்ததால் மூடி கிடந்தது. தனியார் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் பல சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் போராட்ட குழு சார்பில் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.

கலெக்டர் அலுவலகம் முன் கோஷம்

பின்னர் போராட்ட குழுவினர் சார்பில் ராமநகர் டவுனில் மருத்துவ கல்லூரி இடமாற்றத்தை கண்டித்து தர்ணா போராட்டம் நடந்தது. இதில், விவசாயிகள், பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பின்னர் மாவட்ட கலெக்டர் அவினாஷ் மேனன் ராஜேந்திரனை சந்தித்து போராட்ட குழுவினர் மருத்துவ கல்லூரி இடமாற்றம் செய்ய கூடாது என்றுகூறி மனு கொடுக்க முயன்றனர்.

ஆனால் மனுவை வாங்க கலெக்டர் வெளியே வராததால், கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்ட குழுவினர் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ராமநகரில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்திருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


Next Story