இருதரப்பினர் இடையே மோதல்; வாலிபருக்கு கத்திக்குத்து
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெலகாவி:
பெலகாவி மாவட்டம் ராமதுர்கா தாலுகாவை சேர்ந்தவர் கோபால். இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு ரவி என்பவர் உள்ட சிலருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் கும்பலை சேர்ந்தவர்கள் கோபால் மற்றும் அவரது நண்பர்களை தாக்கினர்.
பதிலுக்கு அவர்களும் அந்த கும்பலை சேர்ந்தவர்களை தாக்கினர். இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் கோபாலுக்கு சரமாரி கத்தி குத்து விழுந்தது. மேலும், ரவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தை தடுக்க முயன்ற அந்த பகுதியை சேர்ந்த நஞ்சுண்டா என்பவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்து ராமதுர்கா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். மேலும், தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.