காங்கிரஸ் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்
இரண்டு நாட்களில் காங்கிரஸ் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
மைசூரு:-
வேட்பாளர் பட்டியல்
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மைசூரு டவுன்ஹால் பகுதியில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரனதீப் சிங் சூர்ஜேவாலா, காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட பலர் கலந்து கொண்டு, போராட்டம் நடத்தினர். இதற்கு முன்னதாக மைசூரு விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சித்தராமையா கூறியதாவது:-
கர்நாடக தேர்தலையொட்டி காங்கிரஸ் தரப்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மைசூரு மாவட்டத்தில் மட்டும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். இதற்கான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும். இந்த 2-வது கட்ட பட்டியலில் தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். இதில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
மகன் தேர்தல் பிரசாரம்
ஏற்கனவே நான் அறிவித்தப்படி வருணா தொகுதியில் போட்டியிட்டாலும், அங்கு எனது மகன்தான் பிரசாரம் செய்ய இருக்கிறார். பிற தொகுதிகளில் நான் பிரசாரம் செய்ய இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். நேரம் கிடைக்கும்போது நான் அங்கு சென்று பிரசாரம் ெசய்வேன். வருணா தொகுதி மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்ைகயில் இதை செய்கிறேன். கோலார் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்.
வருணா தொகுதியில் போட்டியிடும்படி கட்சி மேலிடம் கூறியதை சிலர் தவறாக சித்தரிக்கின்றனர். என்னை கட்சி கட்டிபோடவில்லை. இது வீண் வதந்தி. என்னை யாராலும் கட்டிபோட முடியாது. என்னை வெற்றி, பெற செய்வதும், தோல்வியடைய செய்வதும் மக்கள் கையில் உள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் பா.ஜனதா கட்சி தேன் கூட்டில் கை வைத்ததுபோன்று உள்ளது. அந்த கூடு கலைந்த பின்னர்தான் தெரியவரும். தேர்தலுக்காக இந்த அவசர முடிவை பா.ஜனதா எடுத்துள்ளது. அதன் விளைவு இந்த தேர்தலில் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம்
இதையடுத்து கார் மூலம் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றார். அங்கு காங்கிரஸ் தொண்டர்களுடன் கருப்பு துணி கட்டியப்படி சித்தராமையா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், அவர்கள் கொடுத்து வரும் அரசியல் நெருக்கடிகளை கண்டித்தும் அவர் முழக்கம் எழுப்பினார்.