கர்நாடகத்தில் 13-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை...!


கர்நாடகத்தில் 13-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை...!
x

கர்நாடகத்தில் 13-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

பெங்களூரு,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 7-ந்தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கிய அவர், கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகத்தில் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று ஹீரேஹள்ளியில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் காரில் வந்து பொம்மகொண்டனஹள்ளியில் இருந்து தனது 36-வது மற்றும் கர்நாடகத்தில் 12-வது நாள் பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தொடங்கியபோது, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.

அதையும் பொருட்படுத்தாமல் ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கிருந்து இந்த பாதயாத்திரை 12 கிலோ மீட்டர் கடந்து சென்ற நிலையில் 11 மணிக்கு கன்சகாரா பகுதியில் ராகுல் காந்தி ஓய்வு எடுத்தார்.

5 மணி நேர ஓய்வுக்கு பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு கன்சகாரா பகுதியில் இருந்து தொடங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை 6 மணிக்கு மொலகால்மூரு கே.இ.பி. காலனிக்கு வந்தது. அங்கு அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். வனப்பகுதி காரணமாக ராகுல் காந்தி அங்கிருந்து கார் மூலம் 24 கிலோ மீட்டர் பயணித்து ராம்புராவுக்கு வந்தார். அங்குள்ள அம்ருதா விடுதியில் நேற்று இரவு அவர் தங்கினார்.

இந்தநிலையில் கர்நாடகா மாநிலம் ராம்புராவில் 37வது நாள் இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கினார். இந்த பாதயாத்திரையின்போது, ராகுல் காந்தியை பெண்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி நடைப்பயணம் தொடங்கினார். ராகுல் காந்தி இதுவரை 925 கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை 37வது நாளாக ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது.


Next Story