ஆட்சி அதிகாரத்திற்காக நாட்டை உடைத்தது காங்கிரஸ்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு
ஆட்சி ஆட்சி அதிகாரத்திற்காக நாட்டை உடைத்தது காங்கிரஸ் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டினார்.
பெங்களூரு: ஆட்சி அதிகாரத்திற்காக நாட்டை உடைத்தது காங்கிரஸ் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டினார்.
லோக்அயுக்தாவின் அதிகாரம்
விஜயநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில் கட்சியின் பொதுக்கூட்டம் அங்குள்ள புனித் ராஜ்குமார் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
தலித் மக்கள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை நாங்கள் பலப்படுத்தியுள்ளோம். அவர்கள் பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அச்சம் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை மூடிமறைக்க ஊழல் தடுப்பு படையை தொடங்கி லோக்அயுக்தாவின் அதிகாரத்தை பறித்தனர்.
உண்மையான சாயம்
நாங்கள் லோக்அயுக்தாவை மீண்டும் பலப்படுத்தியுள்ளோம். காங்கிரசார் செய்த ஊழல்கள் அனைத்தும் தற்போது வெளியே வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அப்போது காங்கிரசாரின் உண்மையான சாயம் வெளுக்கும். எடியூரப்பாவை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கிறார்கள்.
இதை கண்டு அவர் பயப்பட மாட்டார். அவரை ஒடுக்க காங்கிரசார் முயற்சி செய்தனர். அவர் மீது பொய் வழக்குகளை போட்டனர். ஆனால் அவர் மீண்டும் முதல்-மந்திரி ஆனார். நேருவின் கால் தூசுக்கு மோடி சமமா? என்று சித்தராமையா கேட்டுள்ளார். காந்தியின் கால் தூசுக்கு நேரு சமமா? என்று நாங்களும் கேட்க முடியும். கொரோனா நெருக்கடி காலத்தில் மக்களுக்கு தடுப்பூசி போட்டு காப்பாற்றினோம். இதை உலகமே பாராட்டியது.
நாட்டை உடைத்தனர்
உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் பலமாக உள்ளது. டி.கே.சிவக்குமார், சித்தராமையாவை ஒற்றுமைப்படுத்தியே ராகுல் காந்தி சோர்வடைந்துவிட்டார். நாட்டை 2 ஆக பிரித்தது காங்கிரஸ். ஆட்சி அதிகாரத்திற்காக நாட்டை உடைத்தனர். இப்போது ஒற்றுமை யாத்திரையை காங்கிரசார் நடத்துகிறார்கள். காலிஸ்தானுக்கு இந்திரா காந்தி ஆதரவு கொடுத்தார்.
விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்கு பயம் இல்லை. எங்கள் அரசு விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், டாக்சி, ஆட்டோ டிரைவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். கர்நாடகத்தில் தற்போது தலித் மக்கள் பயத்தில் உள்ளதாக காங்கிரசார் கூறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் தான் வீரசைவ-லிங்காயத் சமூகத்தை உடைக்க முயற்சி நடைபெற்றது. அப்போது மக்கள் அச்சம் அடைந்தனர்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.