136 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது


136 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது
x

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 136 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றிபெற்ற காங்கிரஸ் முழு பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் படுதோல்வி அடைந்தன.

பெங்களூரு:-

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

சட்டசபை தேர்தல்

15-வது சட்டசபையின் பதவி காலம் வருகிற 24-ந் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில் 16-வது சட்டசபையை தேர்ந்தெடுப்பதற்காக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அடுத்த ஆண்டு(2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்த தேர்தலில் முக்கியமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியிலும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணா தொகுதியிலும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, சென்னபட்டணா தொகுதியிலும், இன்னொரு முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் கனகபுரா தொகுதியிலும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்களாக இருந்தனர்.

இதில் 3 கோடியே 88 லட்சத்து 51 ஆயிரத்து 807 வாக்காளர்கள் வாக்களித்தனர். அதாவது 73.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 36 மையங்களில் எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

காங்கிரஸ் முன்னிலை

அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. சரியாக காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களின் தபால் ஓட்டுகளும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் செலுத்திய தபால் ஓட்டுகளும் எண்ணப்பட்டன. இதில் ஆளும் பா.ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இதில் ஆளும் பா.ஜனதாவும், காங்கிரசும் போட்டி போட்டு முன்னிலை பெற்று வந்தன.

நேரம் செல்ல செல்ல, காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஒரு கட்டத்தில் காங்கிரசுக்கு இணையாக பா.ஜனதா 90 தொகுதிகள் வரை முன்னிலையில் இருந்தது. காலை 11 மணிக்கு மேல் பா.ஜனதா முன்னிலையில் இருந்த தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தபடி இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஒரு சில தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள்

முன்னிலை பெறுவதும், பிறகு பின்னோக்கி செல்வதுமாக மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது.

இறுதியில் தோ்தல் முடிவு வெளியிடப்பட்டதில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சி 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. இது மட்டுமின்றி காங்கிரஸ் ஆதரவு வேட்பாளரான முன்னாள் விவசாய சங்கத் தலைவர் புட்டண்ணய்யாவின் மகன் தர்ஷன் புட்டண்ணய்யா மேல்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதையும் சேர்த்தால் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 137 ஆகும். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா 104 இடங்களையும், காங்கிரஸ் 80 தொகுதிகளையும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 37 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த ஏமாற்றம்

பிரதமர் மோடி மிக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட போதிலும் ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. அக்கட்சி ஏற்கனவே தன்னிடம் இருந்த 14 இடங்களை பறிகொடுத்துள்ளது. அக்கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சுயேச்சைகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் கல்யாண ராஜ்ஜிய பிரகதி கட்சியின் தலைவர் ஜனார்த்தனரெட்டி வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் மந்திரியான அவர், ரெட்டி சகோதரர்களில் ஒருவர். அவரை பா.ஜனதா தனது கட்சியில் சேர்க்காததால், தனிக்கட்சி தொடங்கி இந்த தேர்தலை சந்தித்தார் என்பது நினைகூரத்தக்கது.

இந்த தேர்தலில் முக்கியமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவியிலும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணாவிலும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சென்னபட்டணாவிலும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுராவிலும், வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நாராயணகவுடா, கோவிந்த் கார்ஜோள், மாதுசாமி, முருகேஷ் நிரானி, எம்.டி.பி.நாகராஜ், சோமண்ணா, சுதாகர், பி.சி.பட்டீல், ஸ்ரீராமுலு, பி.சி.நாகேஸ், சங்கர் பட்டீல், ஹாலப்பா ஆச்சார், ஆர்.அசோக் என மொத்தம் 13 மந்திரிகள் படுதோல்வி அடைந்தனர். மேலும் சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரி சிர்சி தொகுதியில் தோல்வி அடைந்தார்.

ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி

பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காததால், கடைசி நேரத்தில் கட்சி தாவி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியை தழுவியுள்ளார். அதே நேரத்தில் கட்சி தாவிய இன்னொரு தலைவரான லட்சுமண் சவதி வெற்றி வாகை சூடியுள்ளார். மேலும், குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, ராமநகரில் படுதோல்வியை சந்தித்துள்ளார்.

இந்த வெற்றி மூலம் கர்நாடகத்தை காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு அக்கட்சி 124 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. அப்போது எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோர் பா.ஜனதாவை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டனர். அதனால் பா.ஜனதா 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை எடியூரப்பா, ஸ்ரீராமுலு உள்ளிட்டோரை உள்ளடக்கி பா.ஜனதா ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தது. ஆனால் அக்கட்சி 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.

தென் இந்தியாவில் ஆட்சியை இழந்தது

இந்த தேர்தலில் பா.ஜனதாவின் முகமாக பிரதமர் மோடி மிக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இங்கு பிரசாரம் மேற்கொண்ட பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் மோடியை பாா்த்து வாக்களிக்குமாறு கேட்டனர். பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்பு 8 முறை கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 7 நாட்கள் சூறாவளி பிரசாரம் நடத்தி 22 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.

அது மட்டுமின்றி பெங்களூருவில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி 33 கிலோ மீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தி கட்சிக்கு ஆதரவு திரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் 'இந்த முறை உங்களின் முடிவு, பெரும்பான்மை பா.ஜனதா அரசு' என்ற முழக்கத்தை முன்வைத்தார். ஆனால் இந்த முழக்கத்தை கர்நாடக மக்கள் நிராகரித்துள்ளனர். இந்த தோல்வியால் பா.ஜனதாவுக்கு தென்இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்கிய கர்நாடகத்தை அக்கட்சி இழந்துள்ளது. மேலும் தென்இந்திய மாநிலங்களில் ஒன்றில் கூட பா.ஜனதா ஆட்சி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

ஆனால் இந்த அமோக வெற்றி மூலம் காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை அடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்த கூட்டத்தை நடத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர்கள் வரவுள்ளனர். புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா வருகிற 17-ந்தேதி அல்லது 18-ந் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி கொண்டாட்டம்

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் அபாரமான வெற்றி கிடைத்துள்ளதால், கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அதுபோல் குயின்ஸ் ரோட்டில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும், நடனமாடியும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்-மந்திரி யார்?

காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. சித்தராமையாவுக்கு தற்போது 75 வயதாகிறது. அதனால் இது எனது கடைசி தேர்தல் என்று அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதனால் இந்த முறை தனக்கு முதல்-மந்திரி பதவி வேண்டும் என்பதில் டி.கே.சிவக்குமார் உறுதியாக உள்ளார். ஆனால் டி.கே.சிவக்குமார், பா.ஜனதாவின் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் தான் கட்சியை பலப்படுத்தி இருப்பதாகவும், அதனால் முதல்-மந்திாி பதவிக்கு தன்னை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கட்சி மேலிடத்திடம் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த 2 பேரின் ஆசை ஒரு பக்கம் இருக்க, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் விருப்பம் என்ன என்பது முக்கியமான அம்சமாக உள்ளது. ஏனெனில் கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றபோது, கட்சி எம்.எல்.ஏ.க்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது, அப்போது முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவுக்கும், தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதையடுத்து கதவுகள் மூடப்பட்ட அறைக்குள் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் சித்தராமையாவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் கிடைத்ததால், அவரே முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இந்த முறையும் முதல்-மந்திரி யார் என்பது குறித்து சித்தராமையா-டி.கே.சிவக்குமாரை முன்னிறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால், அதில் சித்தராமையாவே வெற்றி பெறுவார் என்று உறுதியாக சொல்லப்படுகிறது. ஒருவேளை சித்தராமையா முதல்-மந்திரியாக தேர்வானால், டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவி கிடைப்பது உறுதி. சித்தராமையா அனைத்துதரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் குருபா சமூகத்தை சேர்ந்தவர் ஆவர்.

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் 'கிங் மேக்கர்' ஆகும் கனவு தகர்ந்தது

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானதில், பெரும்பாலானவை காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது. சில கணிப்புகள், தொங்கு சட்டசபை அமையும் என்று கூறின. இதனால் கர்நாடக அரசியலில் குழப்பமான சூழல் ஏற்பட்டது. புதிய ஆட்சி அமைப்பதில் ஜனதா தளம்(எஸ்) கட்சி 'கிங் மேக்கர்' ஆகும் என்று அரசியல் நிபுணர்கள் கூறினர். இதனால் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே, குமாரசாமியுடன் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் பேரம் பேச தொடங்கின. அதற்கு அவர் தனது நிபந்தனைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி வைப்பதாக பகிரங்கமாகவே கூறினார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால் நேற்று வெளியான தேர்தல் முடிவு, காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை பலத்தை கொடுத்துள்ளது. இதனால் 'கிங் மேக்கர்' ஆகலாம் என்று கருதிய ஜனதா தளம்(எஸ்) கட்சியின் கனவு தகர்ந்துள்ளது.


Next Story