ஈசுவரப்பா மீது நடவடிக்கை எடுக்க காங்கிரசார் கோரிக்கை
மசூதி ஒலிபெருக்கி குறித்து கருத்து தெரித்த ஈசுவரப்பா மீது நடவடிக்கை எடுக்க காங்கிரசார் கோரிக்கை வைத்துள்ளனர்.
மங்களூரு:-
மசூதியில் உள்ள ஒலிபெருக்கியால் தொந்தரவு ஏற்படுவதாக மந்திரி ஈசுவரப்பா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவருக்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேவில் தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதை அறிந்த தாசில்தார் மனோஜ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது காங்கிரஸ் கட்சியினர், தாசில்தாரிடம், முஸ்லிம் சமுதாயத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய ஈசுவரப்பாவின் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க மாநில அரசை வலியுறுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இது தொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் தாசில்தாரிடம் வழங்கினர். அந்த மனுவை வாங்கி கொண்ட தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.