மக்கள் பிரச்சினைகளை சந்தித்த நேரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை; முன்னாள் மந்திரி யு.டி.காதர் எம்.எல்.ஏ. பேட்டி


மக்கள் பிரச்சினைகளை சந்தித்த நேரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை; முன்னாள் மந்திரி யு.டி.காதர் எம்.எல்.ஏ. பேட்டி
x

மக்கள் பிரச்சினைகளை சந்தித்த நேரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை என்று முன்னாள் மந்திரி யு.டி.காதர் எம்.எல்.ஏ. கூறினார்.

மங்களூரு;

முறைகேடு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று முன்னாள் மந்திரி யு.டி.காதர் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் மூத்த மந்திரிகள், அதிகாரிகளை அரசு பாதுகாப்பதாக நாங்கள் கூறியுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை, கர்நாடக ஐகோர்ட்டு கடுமையாக சாடியது. இதையடுத்து மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரிப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. இந்த வழக்கை சரியான முறையில் விசாரிக்க வேண்டும். கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தபிறகு இந்த வழக்கை சி.ஐ.டி.யிடம் அரசு ஒப்படைத்து இருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் அரசு அதிகாரிகளுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும்.

பக்ரீத் பண்டிகை

உல்லால் பகுதியில் கடல் அரிப்பு ஏற்படும் இடங்களை, மந்திரி பார்வையிட தவறிவிட்டார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இதுபோன்ற பிரச்சினைகளை மக்கள் சந்தித்ததில்லை. மக்கள் பிரச்சினையை சந்தித்த நேரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை.

மாநில அரசுக்கு மக்களை பற்றி எந்த அக்கறையும் இல்லை. பக்ரீத் பண்டிகையின் போது மாடுகளை பலியிடுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பரத் ஷெட்டி எம்.எல்.ஏ. கூறினார்.

பக்ரீத் பண்டிகை உள்பட பல பண்டிகைகளின்போது மாடுகளை சிலர் பலியிடுகிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு முறையான வழிகாட்டுதல்களை கொண்டு வர வேண்டும். யாரும் சட்டத்தை மீறக்கூடாது.

மக்களை பிளவுபடுத்தி...

பரத் ஷெட்டி எம்.எல்.ஏ. பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு இதுபோன்ற முரணான அறிக்கைகளை வெளியிடக்கூடாது. மக்கள் பிரதிநிதிகள், மக்களை பிளவுபடுத்தி நல்லிணக்கத்தை சீர்குலைக்காமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story