நாட்டின் மீது காங்கிரசுக்கு அக்கறை இல்லை; மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கடும் தாக்கு
நாட்டின் மீது காங்கிரசுக்கு அக்கறை இல்லை என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.
உப்பள்ளி;
இலவச மருத்துவ முகாம்
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாளையொட்டி மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் மூன்றாயிரம் மடம் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த மருத்துவ முகாமை முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் இருவரும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டனர். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையும், மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது. பின்னர் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 2030-ல் இந்தியா வல்லரசு நாடாக திகழும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோடி முடுக்கிவிட்டுள்ளார். உலக அளவில் இந்தியா 2 அல்லது 3-வது இடத்தில் வர பிரதமர் நரேந்திர மோடி அயராது பாடுபட்டு வருகிறார்.
நாட்டின் மீது அக்கறை
வருங்காலத்தில் சுகாதாரத்தில் துருக்கி, இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளை இந்தியா முந்திச்செல்லும். இந்தியாவுக்கு பொற்காலம் அமையும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. இதற்கு மோடியின் செயல்திட்டங்களே எடுத்துக்காட்டு. காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் மீது அக்கறை இல்லை. நரேந்திர மோடிதான் நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.