கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை; மந்திரி சுதாகர் குற்றச்சாட்டு


கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை; மந்திரி சுதாகர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நடத்தியதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

இலவசமாக தடுப்பூசி

கர்நாடகத்தில் ரூ.2,141 கோடிக்கு கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக பா.ஜனதா அரசு வழங்கி உள்ளது. நாடு முழுவதும் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி மற்றும் 60 வயது மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக நமது நாடு இருந்திருக்கிறது.

கொரோனா 2-வது அலை தீவிரமாக இருந்தது. அதனையும் கர்நாடக அரசும், மத்திய பா.ஜனதா அரசும் சரியாக நிர்வகித்தது. கொரோனா காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு இருந்த போது 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த உணவு பொருட்கள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டது.

அரசுக்கு ஒத்துழைக்கவில்லை

கொரோனா பரவல் காலகட்டத்தில் வசதி படைத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்காமல், தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பிரதமர் மோடி முன்னுரிமை அளித்தார். கொரோனா 3-வது அலை உருவான போது, காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்தினார்கள். அப்போது கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மாநிலத்தில் சுகாதாரத்துறை பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு பின்பும் நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது. கொரோனா சந்தர்ப்பத்தில் மக்களின் உயிரை காப்பாற்றியது பா.ஜனதா அரசு தான். இதற்காக பா.ஜனதாவுக்கு மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் கூட்டணி ஆட்சியால் மாநிலம் வளர்ச்சி அடையாமல் போனது. எனவே பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.


Next Story