காசோலை மோசடி வழக்கில் காங்கிரஸ் பிரமுகருக்கு 5 மாதம் சிறை சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு
காசோலை மோசடி வழக்கில் காங்கிரஸ் பிரமுகருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு சிக்கமகளூரு சட்டசபை தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது ஹரீஷ் காங்கிரசில் உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் இவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இந்தநிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஹரீஷ், வெங்கட நாராயணன் என்பவரிடம் ரூ.1 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வாங்கிய கடனை வெங்கட நாராயணனுக்கு, ஹரீஷ் திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் அவர் ஹரீசிடம் பணம் கேட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹரீஷ், ரூ.1 கோடிக்கான காசோலையை வெங்கிட நாராயணனிடம் கொடுத்துள்ளார். அதனை அவர் வங்கியில் செலுத்தினார். ஆனால், அதில் பணம் இல்லை என வந்தது. இதுகுறித்து வெங்கிடநாராயணன் ஹரீசிடம் கேட்டார். அதற்கு அவர் முறையாக பதில் கூறவில்லை.
இதையடுத்து வெங்கட நாராயணன், காசோலை மோசடி வழக்கு தொடர்பாக, சிக்கமகளூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டில் வழக்கு முடிந்து நீதிபதி கிருஷ்ணன் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதில், வெங்கடநாராயணனுக்கு, ஹரிஷ் ரூ.1 கோடியே 43 லட்சத்தை வட்டியுடன் கொடுக்க வேண்டும், அவ்வாறு கொடுக்கவில்லை என்றால் 5 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டார்.