பிரதமர் மோடி விழாவுக்கு குவிந்த கூட்டத்தை பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் பதற்றம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

பிரதமர் மோடியின் விழாவுக்கு குவிந்த கூட்டத்தை பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் பதற்றம் அடைந்துள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
தார்வார்:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கடைசி தேர்தல்
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பா.ஜனதாவின் ஏஜெண்டுகள் போல் செயல்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு விரக்தியில் உள்ளது என்பதை அவரது இந்த கருத்து வெளிப்படுத்துகிறது. பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு அதிகளவில் மக்கள் குவிந்தனர். இந்த கூட்டத்தை பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். ஒரு முன்னாள் முதல்-மந்திரி இவ்வாறு பேசுவது சரியா?. இதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
வருகிற சட்டசபை தேர்தல் தனது கடைசி தேர்தல் என்று குமாரசாமி கூறியுள்ளார். மக்களுக்கு சேவையாற்ற அவருக்கு இன்னும் வயது உள்ளது. எதன் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறினார் என்று எனக்கு தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் இத்தகைய விஷயங்கள் நடைபெறுவது இயல்பானது தான். தேர்தலுக்கு தேர்தல் வாக்காளர்கள் பக்குவம் அடைகிறார்கள். கட்சி தலைவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
மக்களின் கவனம்
விஜய சங்கல்ப ரத யாத்திரை நாளை (இன்று) சாம்ராஜ்நகரில் தொடங்குகிறது. இந்த ரத யாத்திரை 224 தொகுதிகளுக்கும் செல்கிறது. தாவணகெரேயில் நிறைவடைகிறது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் போன்றோர் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது, அவற்றின் மீது மக்களின் கவனம் அதிகமாக ஈர்க்கப்படுகிறது. வேட்பாளர்களை கட்சியின் உயர்நிலை குழு இறுதி செய்யும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.