காங்கிரஸ் தலைவர்கள் 2-வது நாளாக தீவிர ஆலோசனை


காங்கிரஸ் தலைவர்கள் 2-வது நாளாக தீவிர ஆலோசனை
x

கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது குறித்து 2-வது நாளாக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மல்லிகார்ஜுன கார்கேவை, டி.கே.சிவக்குமார், பரமேஸ்வர் சந்தித்து பேசினார்கள்.

பெங்களூரு:-

2-வது நாளாக ஆலோசனை

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றிருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. என்றாலும், தொங்கு சட்டசபை அமையலாம் என்றும் சில கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது. இதையடுத்து, இன்று நடைபெறும் ஓட்டு எண்ணிக்கைக்கு பின்பு அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி இருந்தார்கள். பெங்களூருவில் உள்ள, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டுக்கு சென்று முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்கு டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் எம்.பி. சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

முதல்-மந்திரி பதவி குறித்து...

அப்போது தனிப்பெரும்பான்மை காங்கிரசுக்கு கிடைத்தால் யாருக்கு முதல்-மந்திரி பதவி கொடுப்பது என்பது குறித்து மல்லிகார்ஜுன கார்கேவுடன், டி.கே.சிவக்குமார் ஆலோசித்ததாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக தான் அனுபவித்த சிரமங்கள் குறித்து மல்லிகார்ஜுன கார்கேவிடம் டி.கே.சிவக்குமார் கூறியதாகவும் தெரிகிறது. அதே நேரத்தில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்லாமல் பார்த்து கொள்வது, ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை குறித்தும் 2 தலைவர்களும் விரிவாக ஆலோசித்து இருந்தார்கள்.

அதைத்தொடர்ந்து, சித்தராமையா வீட்டுக்கு, கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா சென்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் சுயேச்சைகளின் ஆதரவை பெறுவது குறித்தும் 2 பேரும் விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். இதற்கிடையில், இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபாலும் பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார்.


Next Story