மேகாலயா தேர்தலின்போது அமித்ஷா குற்றச்சாட்டு: கான்ராட் சங்மா அரசு மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை சி.பி.ஐ.க்கு காங்கிரஸ் கடிதம்
மேகாலயா சட்டசபை தேர்தலின்போது, அங்கு பதவியில் இருந்த கான்ராட் சங்மா அரசு நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு என அமித்ஷா புகார் கூறியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு காங்கிரஸ் கட்சி எடிதம் எழுதி உள்ளது.
புதுடெல்லி,
மேகாலயா சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ.க. மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா, அங்கு பிப்ரவரி 17-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், அங்கு பதவியில் இருந்த முதல்-மந்திரி கான்ராட் சங்மாவின் அரசு, நாட்டிலேயே ஊழல் மலிந்த அரசு என்று குற்றம் சாட்டினார்.
ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் அதே கான்ராட் சங்மாவின் கூட்டணி அரசில் பா.ஜ.க.வும் இடம் பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மேகாலயாவில், கான்ராட் சங்மா அரசை ஊழல் மலிந்த அரசு என அமித்ஷா குற்றம்சாட்டியதை நினைவுபடுத்தி, இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி, பிரச்சினை எழுப்பி இருக்கிறது.
இது தொடர்பாக சி.பி.ஐ. இயக்குனர் சுபோத் ஜெயிஸ்வாலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில் ஜெய்ராம் ரமேஷ் கூறி இருப்பதாவது:-
அமித்ஷா மத்திய உள்துறை மந்திரி ஆவார். அவர் மேகாலயாவில் அமைந்திருந்த கான்ராட் சங்மா அரசு நாட்டிலேயே ஊழல் மலிந்த அரசு என்று கூறினார். உள்துறை மந்திரி என்ற வகையில், அவர் இந்த முடிவுக்கு வருவதற்கு, அது தொடர்பான தகவல் மற்றும் உண்மைகளை நிச்சயமாக அணுகி இருப்பார்.
சில விவரிக்க முடியாத காரணங்களுக்காக உள்துறை மந்திரி, அப்போதைய மேகாலயா அரசின் மீதான ஊழல் நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க தவறி உள்ளார்.
விசாரிக்க வேண்டும்...
எனவே நாட்டின் நலனை முன்னிட்டு, நீங்கள் இந்த விவகாரத்தில் அமித்ஷாவுக்கு சம்மன் அனுப்பி, மேகாலயா அரசு மீது அவர் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்கள், ஆதாரங்களை அனுப்புமாறு கூற வேண்டும்.
மேலும், அதே கான்ராட் சங்மாவுக்கு சட்டசபை தேர்தலுக்கு பின்னர் பா.ஜ.க. ஆதரவு அளிப்பதற்காக, மேகாலயா அரசின் ஊழல் தொடர்பான தகவல்களை வெளிவராமல் நசுக்குவதற்கு, உள்துறை மந்திரி, தனது கட்சி அல்லது பிற சக்திகளின் தேவையற்ற வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாரா என்பதையும் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.
சி.பி.ஐ. இயக்குனருக்கு தான் எழுதிய கடிதத்தை டுவிட்டரில் ஜெய்ராம் ரமேஷ் பதிவேற்றம் செய்துள்ளார். அத்துடன் அமித்ஷா பிரசாரத்தின்போது, மேகாலயா அரசு மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து வெளியான பத்திரிகை செய்திகளையும் இணைத்துள்ளார்.
ராகுலைப் போன்று அமித்ஷாவிடம் விசாரணை...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டபோது, தனது நடைப்பயணத்தின்போது பெண்கள் இன்னும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாக என்னிடம் தெரிவித்தனர் என பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது தெரிவித்தார்.
இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்கு டெல்லி போலீசார் கடந்த 19-ந் தேதி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போன்றுதான் கான்ராட் சங்மா அரசு குறித்து அமித்ஷா கூறிய புகார் குறித்து அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், சி.பி.ஐ. இயக்குனருக்கு கடிதம் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.