போராட்டத்தின் போது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதி!


போராட்டத்தின் போது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதி!
x

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.டெல்லி போலீசார் அவர் மீது தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் அமைதி வழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி.க்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே அமலாக்கத்துறை அலுவலகத்தை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதி மணி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது சென்றனர்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை போலீசார் தாக்கியதால் இடது விலா பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், காவலர்கள் தள்ளிவிட்டதில் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, டெல்லி போலீசாரால் போராட்டம் நடத்திய கட்சி எம்.பி.க்கள் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான குழுவினர் சந்தித்து புகார அளித்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போராட்டத்தின் போது டெல்லி போலீசார் அவர் மீது தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் அலுவலகம் வெளியிடுள்ளது.


Next Story