பா.ஜனதா தொண்டர் கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தந்தை-மகன் கைது


பா.ஜனதா தொண்டர் கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தந்தை-மகன் கைது
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே பா.ஜனதா தொண்டர் கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பா.ஜனதா தொண்டர் கொலை

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா நந்தகுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஷெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 55). இவர், பா.ஜனதா தொண்டர் ஆவார். இவருடைய சகோதரர் கணேசப்பா (58). இவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். அண்ணன் காங்கிரசிலும், சகோதரர் பா.ஜனதாவிலும் இருந்தனர். சட்டசபை தேர்தலில் ஒசக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜ் தோல்வியை தழுவி இருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் சரத் பச்சேகவுடா வெற்றி பெற்றிருந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு ஒசக்கோட்டை தொகுதியில் பல்வேறு பகுதிகளில் 2 கட்சிகளின் தொண்டர்களும் மோதிக் கொண்ட சம்பவங்கள் அரங்கேறி இருந்தது. அதன்படி, கடந்த 10-ந் தேதி இரவு சரத் பச்சேகவுடா வெற்றி பெற்றதால், அதனை கொண்டாடும் விதமாக கணேசப்பா, அவரது மகன் ஆதித்யா மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்தார்கள். இதற்கு கிருஷ்ணப்பா எதிர்ப்பு தெரிவித்தார்.

தந்தை-மகன் கைது

அப்போது ஏற்பட்ட தகராறில் உருட்டுக்கட்டையால் கிருஷ்ணப்பாவை கொலை செய்திருந்தார்கள். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நந்தகுடி போலீஸ் நிலையம் முன்பாக கிருஷ்ணப்பா உடலை வைத்து போராட்டமும் நடத்தி இருந்தனர். இதுகுறித்து நந்தகுடி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கணேசப்பா, அவரது மகன் ஆதித்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் முன்விரோத்தில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கைதான தந்தை, மகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை போலீசார் தேடிவருகிறார்கள்.


Next Story