சித்தராமையா கார் மீது முட்டை வீசியதை கண்டித்து மண்டியாவில் காங்கிரசார் நூதன போராட்டம்


சித்தராமையா கார் மீது முட்டை வீசியதை கண்டித்து  மண்டியாவில் காங்கிரசார் நூதன போராட்டம்
x

சித்தராமையா கார் மீது முட்டை வீசியதை கண்டித்து மண்டியாவில் காங்கிரசார் நூதன போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு: கர்நாடகம் மாநிலம் சிவமொக்காவில் சுதந்திர தின பவள விழாவையொட்டி வீரசாவர்க்கரின் படத்துடன் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனர்களை ஒரு தரப்பினர் கிழித்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் வீரசாவர்க்கர் படத்தை ஏன் வைத்தீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பா.ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மழை-வெள்ளம் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் சென்ற சித்தராமையா காரை குஷால் நகர் அருகில் திதிமதி பகுதியில் முற்றுகையிட்ட பா.ஜனதாவினர் முட்டை வீசி, கருப்புகொடி காட்டி போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும், எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் மண்டியா டவுனில் விஸ்வேசுவரய்யா சிலை முன்பு நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் பா.ஜனதாவினர் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசியதை கண்டித்து, அவித்த முட்டைகளை சாப்பிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள், சித்தராமையா கார் மீது முட்டை வீசிய பா.ஜனதாவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநில அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.


Next Story