கா்நாடகத்தில் 140 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்; டி.கே.சிவக்குமார் பேச்சு
40 சதவீத கமிஷன் அரசை விரட்டியடித்து கர்நாடகத்தில் 140 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு:
பஸ் யாத்திரை
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளது. இதனால் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் தனித்தனியாக யாத்திரை தொடங்கி உள்ளன. அந்த கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் மக்களை சந்தித்து குறைகளை கேட்கும் பஸ் யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது.
இந்த பஸ் யாத்திரை நேற்று முன்தினம் சிக்கமகளூருவுக்கு வந்தது. பின்னர் சிக்கமகளூருவில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு சிக்கமகளூரு மாவட்ட காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
40 சதவீத கமிஷன்
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
கர்நாடகத்தில் மக்களின் குறைகள், கஷ்டங்களை கேட்க இந்த பஸ் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் குறைகளை கேட்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அவை சரி செய்யப்படும். 3 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். கர்நாடக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளனர். பா.ஜனதாவினர் அனைத்து துறையிலும் 40 சதவீத கமிஷன் கேட்கிறார்கள். இந்த ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
இதனால் மக்கள் பா.ஜனதா ஆட்சியை தூரத்தில் வைக்க விரும்புகிறார்கள். 40 சதவீத கமிஷன் புகாரில் சிக்கி மந்திரி ஒருவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சித்தராமையா ஆட்சியில் இருந்தபோது 5 ஆண்டுகள் எந்தவித ஊழல் புகார் இன்றி வெற்றிகரமாக ஆட்சியை நடத்தினார்.
ஆட்சியை பிடிக்கும்
தற்போதைய ஆட்சியாளர்களின் ஊழல்களை பட்டியலிடலாம். கொரோனா சமயத்தில் கூட பா.ஜனதாவினர் ஊழல் செய்துள்ளனர். பாக்கை மானிய விலையில் கொள்முதல் செய்வதாக அரசு கூறியது. ஆனால் இதுவரை மானிய விலையில் பாக்கை கொள்முதல் செய்யவில்லை. சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி அடையும். 40 சதவீத கமிஷன் அரசை விரட்டியடித்து காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். மாநிலத்தில் 140 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்.
நாங்கள் வாக்குறுதி அளித்ததுபோல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.2000, ரேஷன் கடையில் 10 கிலோ இலவச அரிசி ஆகியவை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மது குடித்துவிட்டு...
இதைடுத்து சித்தராமையா பேசுகையில், பா.ஜனதா மதத்தின் பெயரில் அரசியல் செய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் அமைதி இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த தொகுதியை சேர்ந்த சி.டி.ரவி எம்.எல்.ஏ. மத கலவரத்தை தூண்டுவது போல் பேசி வருகிறார். எனக்கு சித்ராமுல்லாகான் என்று பெயர் வைத்துள்ளார். எனக்கு பெயர் வைக்க அவர் யார்?. அவர் மது குடித்தவர் போல பேசி வருகிறார்.
சிக்கமகளூருவில் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும். ஆர்.எஸ்.எஸ். அச்சுறுத்தலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்றார்.