காங்கிரசின் உத்தரவாத திட்டத்தில் தெளிவு இல்லை வேதவியாஸ் காமத் எம்.எல்.ஏ. பேச்சு


காங்கிரசின் உத்தரவாத திட்டத்தில் தெளிவு இல்லை வேதவியாஸ் காமத் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 4:28 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரசின் உத்தரவாத திட்டத்தில் எந்த தெளிவும் இல்லை என்று வேதவியாஸ் காமத் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

மங்களூரு-

காங்கிரசின் உத்தரவாத திட்டத்தில் எந்த தெளிவும் இல்லை என்று வேதவியாஸ் காமத் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

உத்தரவாத திட்டம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையா பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் தேர்தலின் போது அளித்த உத்தரவாத திட்டங்கள் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களையும் அதிருப்திகளையும் ஏற்படுத்தியுள்ளது. 200 யூனிட் இலவச மின்சாரம் என்று கூறிவிட்டு, மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக காங்கிரஸ் மீது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரசின் செயல்பாட்டை கண்டித்து மாநில முழுவதும் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தட்சிண கன்னடா மாவட்டத்தில் மணிக்கூண்டு கோபுரம் அருகே பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

200 யூனிட் இலவச மின்சாரம்

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட வேதவியாஸ் காமத் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கர்நாடகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி 5 உத்தரவாதங்களை முன் வைத்தது. அதன்படி 200 யூனிட் இலவச மின்சாரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், குடும்ப தலைவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் உள்பட 5 திட்டங்களை அறிவித்தது. இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டாலும், அதை முறையாக செயல்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது. தேர்தலுக்கு முன்பு ஒன்று கூறிவிட்டு, தற்போது அதை காங்கிரஸ் கட்சி மாற்றி கூறி வருகிறது.

நிபந்தனை அடிப்படையில் மின் கட்டண சலுகை மற்றும் மின் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று கூறி வருகிறது. மேலும் மற்றொரு புறம் மின் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி அறிவித்துள்ளது. இதில் எதை நம்புவது என்று மக்கள் திணறி வருகின்றனர். இந்த திட்டத்தில் தெளிவு இல்லை. மக்களுக்கு புரியும்படியாக இந்த திட்டம் இல்லை. மேலும் எதிர்பார்த்தபடி அனைவருக்கும் இந்த இலவச மின்சாரம் வழங்கவில்லை.

பெண்களுக்கு உதவி தொகை

இது ஒரு கண்துடைப்பு நாடகம். இதை மக்கள் நம்ப மாட்டார்கள். அதேபோல குடும்ப தலைவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. மாநிலம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மாநில அரசு உதவி தொகை வழங்கவேண்டும்.

இதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் இருக்கிறதா?. மக்கள் காங்கிரசின் நடவடிக்கையை கண்காணிக்க தொடங்கிவிட்டனர். அவர்களிடம் இருந்து காங்கிரஸ் தப்பிக்க முடியாது. பொய்யான வாக்குறுதியை முன் வைத்து வெற்றி பெற்றதற்கு மக்கள் நல்ல பாடங்களை கற்பிப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story