பாக்கு தோட்டங்களுக்கு சொட்டு நீர் பாசன திட்டத்தை அமல்படுத்த பரிசீலனை
கர்நாடகத்தில் பாக்கு தோட்டங்களுக்கு சொட்டு நீர் பாசன திட்டத்தை அமல்படுத்த பரிசீலிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
திகளர் வாரியம்
திகளர் சமூக மக்கள் தங்களின் தொழிலை திறமையான முறையில் மேற்கொள்கிறார்கள். இளைஞர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அந்த மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். திகளர் சமூகம் உழைக்கும் வர்க்கம். இந்த சமூகத்தை அடையாளம் கண்டு அதற்கென்று ஒரு திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் தோன்றியது. அதன் அடிப்படையில் தான் திகளர் சமூக மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார ரீதியாக அந்த சமூக மக்களை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை அந்த சமூகத்தின் இளைஞர்கள், இளம் பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதுகுறித்து அந்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அப்போது தான் அனைவருக்கும் திட்டத்தின் பயன்கள் கிடைக்கும். நாம் ஆற்றும் பணிகள் பற்றி பிறர் பேச வேண்டும். அவ்வாறு செயல்பட வேண்டியது அவசியம்.
சொட்டு நீர் பாசனம்
பாக்கு விவசாய தோட்டங்களுக்கு சொட்டு நீர் பாசன திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கேட்டு வருகிறார்கள். இதுகுறித்து பரிசீலிக்கப்படும். இதில் தலித், பழங்குடியின விவசாயிகளுக்கு 90 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. பாக்கு தோட்டக்கலை பயிரில் சேருகிறது. பொது விவசாயிகளுக்கான மானியம் 75 சதவீதம் வழங்கப்படுகிறது. உள்துறை மந்திரி அமித்ஷா சித்ரதுர்காவுக்கு வருகை தருவது குறித்து இன்னும் தேதி முடிவாகவில்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.