புதிய சட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை


புதிய சட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை
x

கர்நாடகத்தின் அமைதியை கெடுக்கும் விதமாக பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை நடத்தப்படும் என்று மந்திரி பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

பெங்களூருவில் நேற்று மந்திரி பிரியங்க் கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சட்டங்களுக்கு தடை

கர்நாடகத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்பி காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர். அவர்கள் எதிர்ப்பார்பின்படி நாங்கள் ஆட்சி நடத்துவோம். காங்கிரஸ் ஆட்சிக்கு

வந்திருப்பதால் திப்பு ஜெயந்தியை மீண்டும் கொண்டாடப்படுவது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை.

கடந்த பா.ஜனதா ஆட்சியில் எந்த ஜெயந்தி எல்லாம் அரசு சார்பில் கொண்டாடப்பட்டது என்பது குறித்து பரிசீலிக்கப்படும். அதன்பிறகு முடிவு செய்யப்படும். அதே நேரத்தில் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பசுவதை தடுப்பு சட்டம், மதமாற்று தடை சட்டம், பள்ளிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை, பள்ளி புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிப்பது குறித்தும் பரிசீலனை நடத்தப்படும்.

அமைதியை கெடுக்கும் விதமான...

அந்த சட்டங்களால் மாநிலத்தில் அமைதியை கெடுக்கும் விதமான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாலும், தேவையில்லாமல் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் அளவுக்கு அசம்பாவிதங்கள் நடந்திருப்பதாலும், அதற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை நடத்தப்படும். அதேபோல கர்நாடகத்திற்கும், கன்னடர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக சட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை நடத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சில இந்து அமைப்புகள் மாநிலத்தில் இஸ்லாமிக் அரசு அமைந்திருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்று மாநிலத்தில் அமைதியை கெடுக்கும் விதமான கருத்துகளை பதிவிடுவதற்கு அனுமதியில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story