வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் ஆட்சியாளர்கள் தப்பிக்க சதி- சித்தராமையா குற்றச்சாட்டு


வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் ஆட்சியாளர்கள் தப்பிக்க சதி-  சித்தராமையா குற்றச்சாட்டு
x

வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் ஆட்சியாளர்கள் தப்பிக்க சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு: வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் ஆட்சியாளர்கள் தப்பிக்க சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நகைப்புக்குரியது

வாக்காளர் பட்டியல் முறைகேடு நகைப்புக்குரியது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இந்த முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்டவர்களை விட்டுவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ஏஜெண்டு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் கர்நாடக பா.ஜனதா அரசின் செயல்பாடுகள் எவ்வளவு நகைப்புக்குரியது என்பதை போலீசார் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நாங்கள் முதல்-மந்திரிக்கு எதிராகவே புகார் கொடுத்துள்ளோம். ஆனால் ரூ.20 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஏழை ஏஜெண்டு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அவரை பலிகடா ஆக்கிவிட்டு தாங்கள் தப்பிக்க ஆட்சியாளர்கள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தன்னை பாதுகாத்துக்கொள்ள இந்த வாக்காளர் முறைகேடு விவகாரத்தை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிட்டுள்ளார்.

நான் வரவேற்கிறேன்

ஒரு தனியார் நிறுவனத்தின் பின்னணி என்ன என்பதை ஆராயாமல் அனுமதி வழங்கியதற்கும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மாநில அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியதற்கும் என்ன சம்பந்தம்?. இலவசமாக வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை செய்த சிலுமே நிறுவனத்தின் பின்னணி என்ன?, அதன் உரிமையாளர் யார்?, அதன் நிதி நிலை திறன் என்ன?, எத்தனை ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்?, அந்த நிறுவனத்திற்கு நிதி எங்கிருந்து வருகிறது? என்பது போன்ற விஷயங்கள் குறித்து விசாரணை நடைபெற வேண்டும்.

புகார் வந்தவுடன் அந்த நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை மாநகராட்சி ரத்து செய்துள்ளதை நான் வரவேற்கிறேன். ஆனால் செய்த தவறுக்கு அனுமதியை ரத்து செய்த தண்டனை மட்டும் போதாது அல்லவா?. அனுமதி ரத்து மூலம் அதில் தவறு நடந்துள்ளது என்பதை அரசே ஒப்புக்கொண்டது போல் இருக்கிறது அல்லவா?. சமூக சேவைக்கு பல்வேறு வழிகள் இருக்கும்போது, அந்த நிறுவனம் தாமாக முன்வந்து வாக்காளர் பட்டியல் திருத்த பணியை இலவசமாக செய்கிறோம் என்று கூறியபோது, மாநகராட்சி அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்திருக்க வேண்டும்.

அதிகாரிகளுக்கும் தொடர்பு

ஆனால் அவ்வாறு சந்தேகம் வராத நிலையில் இந்த முறைகேட்டில் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று அர்த்தம் அல்லவா?. அந்த தனியார் நிறுவனம் முறைகேடான வழியில் சேகரித்த தகவல்கள் என்ன ஆனது?, அந்த தகவல்களை மாநகராட்சிக்கு வழங்கி உள்ளார்களா? அல்லது அந்த தகவல்கள் எந்த அரசியல் கட்சிக்காவது விற்பனை செய்யப்பட்டுள்ளதா?.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.


Next Story