கர்நாடகத்தில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசியல் சாசனத்தில் திருத்தம்; சித்தராமையா வலியுறுத்தல்


கர்நாடகத்தில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசியல் சாசனத்தில் திருத்தம்; சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இட ஒதுகக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசு அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்கவில்லை

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், நீதிபதி நாகமோகன் தாஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக ஏற்க வேண்டும் என்று கூறினோம். சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை உடனே கூட்டி இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி

மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். நீதிபதி நாகமோகன்தாஸ் குழு அறிக்கை வழங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை இந்த அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பழங்குடியினர் சமூகத்தில் மொத்தம் 6 சாதிகள் உள்ளன. தற்போது அதன் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. ஆதிதிராவிடர்களுக்கு 17 சதவீதமாகவும், பழங்குடியினருக்கு 7 சதவீதமாகவும் அதிகரிக்க வேண்டும் என்று நாகமோகன்தாஸ் குழு பரிந்துரை செய்துள்ளது.

அரசியல் சாசன பாதுகாப்பு

மத்திய அரசு, அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அந்த திருத்தத்தை 9-வது அட்டவணையில் சேர்த்தால் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடுக்க முடியாது. இந்த பணியை முதலில் மத்திய அரசு செய்ய வேண்டும். இந்த கருத்தை நாகமோகன்தாஸ் குழு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு 69 சதவீதமாக உள்ளது. இதற்கு அரசியல் சாசனத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அசாதாரண சூழ்நிலையில் இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. முன்னேறிய சமூகங்களில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. இதனால் மத்திய அரசில் இட ஒதுக்கீடு 49½ சதவீதத்தில் இருந்து 59½ சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story