சூடானில் இந்தியர்கள் பாதுகாப்பு பற்றி அமெரிக்கா உள்பட 4 நாடுகளுடன் ஆலோசனை: அரசு தகவல்


சூடானில் இந்தியர்கள் பாதுகாப்பு பற்றி அமெரிக்கா உள்பட 4 நாடுகளுடன் ஆலோசனை: அரசு தகவல்
x
தினத்தந்தி 19 April 2023 12:45 PM IST (Updated: 19 April 2023 1:22 PM IST)
t-max-icont-min-icon

சூடானில் இந்தியர்களின் பாதுகாப்புக்காக அவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் டெல்லியில் கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து இருக்கிறோம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமுக முடிவு ஏற்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. அதிரடி ஆதரவு படைகள் என அழைக்கப்படும் துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியிருந்தது.

எனினும், சூடானில் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் பலர் பலியானார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தற்போது சூடானில் ராணுவ படைகள் இடையேயான தொடர் மோதலில் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்து உள்ளது. 2,600 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

இந்த தகவலை சூடானின் சுகாதார அவசரகால இயக்கங்களுக்கான மையத்தின் அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. உயிரிழந்தவர்களில் இந்தியர் ஒருவரும் அடங்குவார். ராணுவ மோதலில் ஐ.நா. பணியாளர்களும் உயிரிழந்து உள்ளனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சூடானில் உள்ள இந்தியர்களை பாதுகாக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இதுபற்றி அரசு வட்டாரங்கள் வெளியிட்ட செய்தியில், சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றி பல்வேறு நாடுகளுடனும் ஒன்றிணைந்து, நெருங்கி பணியாற்றி வருகிறோம். அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய முக்கிய பங்கு வகிக்கும் 4 நாடுகளுடன் சேர்ந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளோம்.

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார மந்திரிகளுடன், இந்தியர்களின் பாதுகாப்பு பற்றி மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார். அவர்கள் இருவரும் தங்களால் இயன்ற நடைமுறை சாத்தியமுள்ள உதவிகளை செய்கிறோம் என உறுதியளித்து உள்ளனர். வாஷிங்டன் டி.சி. மற்றும் லண்டனில் உள்ள நமது தூதர்களும் அவர்கள் வசிக்கும் நாடுகளின் அரசாங்கத்துடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

சூடானில் பெரிய அளவில் செயல்பாட்டில் உள்ள ஐ.நா. அமைப்புடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, சூடானின் கார்டோம் நகரில் உள்ள இந்திய தூதரகத்திலும் தொடர்ந்து, தொடர்பில் இருந்து வருகிறோம். டெல்லியில் கட்டுப்பாட்டு அறை ஒன்றையும் அமைத்து இருக்கிறோம் என அரசு தெரிவித்து உள்ளது.


Next Story