கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை


கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் நேற்று அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நேர்மையாக தேர்தல் நடத்த அரசியல் கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

பெங்களூரு:

சட்டசபைக்கு தேர்தல்

கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

இதற்கான தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் 1.30 மணியளவில் கர்நாடகம் வந்தனர். இந்த குழுவில் தேர்தல் கமிஷனர்கள் அனுப் சந்திரபாண்டே, அருண் கோயல் மற்றும் துணை தேர்தல் கமிஷனர்கள் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்த குழுவினரை கெம்பேகவுடா விமான நிலையத்தில் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் ராஜேந்திர சோழன், வெங்கடேஷ்குமார், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், டி.ஜி.பி. பிரவீன் சூட், பெங்களூரு புறநகர் மாவட்ட கலெக்டர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

அதைத்தொடர்ந்து சட்டசபை தேர்தல் குறித்து பெங்களூரு விகாச சவுதாவில் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தினார். இதில் தேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தேர்தல் அதிகாரிகள் விவரித்தனர்.

அதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தினார். இதில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள், ஆம் ஆத்மி உள்பட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அனைத்து கட்சியினருக்கும் தலா 10 நிமிடங்கள் கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்துகள் கூற அவகாசம் வழங்கப்பட்டது. அனைத்து கட்சி பிரதிநிதிகளும் தேர்தலை நேர்மையாகவும், அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி வாக்காளர்களின் அச்சுறுத்தலை தடுக்க வாக்குப்பதிவு அன்று மாநிலங்களுக்கு இடையிலான எல்லையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தயார்

இதில் கர்நாடக சட்டசபை தேர்தலை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்தது. சுமார் ஒரு மணி நேரம் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் அரசியல் கட்சியினருடன் விவாதித்தார்.

பின்னர் அவர் பேசுகையில், கர்நாடக சட்டசபை தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வெளிப்படை தன்மையுடன் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளை செய்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். எனவே தேர்தலை நேர்மையாக நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் கோரிக்கை

கூட்டம் முடிந்த பிறகு இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பங்கேற்ற முன்னாள் எம்.பி. உக்கிரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்தும், விடுபட்ட 33 லட்சம் வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேலும் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி அவசரம், அவசரமாக கர்நாடகத்தில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைத்து வருகிறார். இதற்கு அவசரமாக டெண்டர் கோரப்படுகிறது. எனவே உடனடியாக தேர்தல் நடத்தை விதியை அமல்படுத்த வேண்டும்.

உத்தரபிரதேசம், குஜராத் உள்பட பா.ஜனதா வெற்றி பெற்ற மாநில சட்டசபை தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கர்நாடக சட்டசபை தேர்தல்களில் பயன்படுத்த கூடாது என கோரிக்கை வைத்துள்ளோம். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். கர்நாடக டி.ஜி.பி. பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும், எனவே அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், சமூகவலைத்தளங்களில் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் விளம்பர செலவு பட்டியலை வெளியிட கோரியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கு

அதைத்தொடர்ந்து ஜனநாயகம் குறித்த சர்வதேச கருத்தரங்கு ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் உள்ளிட்ட தேர்தல் கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு தலைமை தேர்தல் கமிஷனர் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இதில் கலந்து கொள்ளும் கலெக்டர்கள், தங்கள் மாவட்டங்களில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவரிக்கிறார்கள். வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி மையங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

விழிப்புணர்வு கண்காட்சி

அதைத்தொடர்ந்து பெங்களூரு மாநகராட்சி சார்பில் ஐ.ஐ.எஸ்.சி. வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு கண்காட்சி தொடக்க விழா நடக்கிறது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். பின்னர் தேர்தல் அலுவலக தூதுவர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடக்கிறது. அத்துடன் 2-வது நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.

அதன் பிறகு 11-ந் தேதி பெங்களூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார், பிற்பகலில் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதில் கர்நாடக சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமை தோ்தல் கமிஷனர் விவரிக்கிறார். அத்துடன் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழு டெல்லி புறப்பட்டு செல்கிறது.


Next Story