சென்னையை நோக்கி மீண்டும் புறப்பட்டது கோரமண்டல் விரைவு ரெயில்...!
கோர விபத்திற்கு பிறகு மேற்கு வங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது கோரமண்டல் விரைவு ரெயில்.
கொல்கத்தா,
மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து கடந்த 2-ம் தேதி புறப்பட்ட ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து, எதிர் திசையில் வந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸும் இந்த விபத்தில் சிக்கியது. 3 ரெயில்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த பகுதியை சீரமைக்கும் பணி ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் மேற்பார்வையில் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டது. விபத்தால் சேதமடைந்த ரெயில்வே தண்டவாளங்கள்உடனுக்குடன் சரி செய்யப்பட்டதை அடுத்து அந்தப் பகுதி வழியாக ஹவுரா - பூரி வந்தே பாரத் ரெயில் கடந்த திங்கள்கிழமை இயக்கப்பட்டது. இந்நிலையில், விபத்துக்குள்ளான ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பழுதுபார்க்கப்பட்டு அது இன்று தனது வழக்கமான பயணத்தை தொடங்கியது.
இந்தநிலையில், மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலை, ரெயில்வே பணியாளர்களும் பயணிகளும் மகிழ்ச்சியுடன் கைகளை அசைத்து அனுப்பிவைத்தனர். பெரும் விபத்துக்குள்ளான ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 5 நாட்களில் மீண்டும் தன் பயணத்தை தொடங்கி இருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.