இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வு
இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று பாதிப்பு 1,890-ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 1,805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 397, குஜராத்தில் 303, கேரளாவில் 299, கர்நாடகாவில் 209, டெல்லியில் 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 5 ஆயிரத்து 952 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 932 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 64 ஆயிரத்து 815 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 10,300-ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றைவிட 867 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் நேற்று குஜராத், சண்டிகர், இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என 4 பேர் இறந்துள்ளனர். மேலும் கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,837 ஆக உயர்ந்துள்ளது.