மாநகராட்சி ஊழியர்கள் 1-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம்
பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் 1-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்
பெங்களூரு-
கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பாக பல்வேறு தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் குதித்து வருகின்றனர். ஏற்கனவே போக்குவரத்து ஊழியர்கள், அரசு ஊழியர் சங்கம் வருகிற 1-ந்தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 1-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சியின் அதிகாரி மற்றும் ஊழியர்கள் சங்க தலைவர் அம்ஜத்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வேண்டும் என்றும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊழியர்களின் குடும்பத்தினர் நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற திட்டம் கொண்டு வர வேண்டும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்தை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தோம். எங்களது கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. வருகிற 1-ந் தேதிக்குள் மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் 1-ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.