கோர்ட்டு உத்தரவுகளை மாநகராட்சி அதிகாரிகள் மதிப்பதில்லை
கோர்ட்டு உத்தரவுகளை மாநகராட்சி அதிகாரிகள் மதிப்பதில்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு நகரில் பல்வேறு சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு இருப்பதால், அந்த சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சாலை பள்ளங்களில் சிக்கி வாகன ஓட்டிகள் உயிர் பலியாகும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் சாலை பள்ளங்கள் மூடாமல் இருப்பதால், அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகராட்சிக்கு உத்தரவிடும்படி கோரி பெங்களூருவை சேர்ந்த விஜய் மனன் உள்ளிட்டோர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தார்கள். அந்த மனுக்கள் மீதான விசாரணை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.பி.வரலே, நீதிபதி அசோக் எஸ்.கிணகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், பெங்களூருவில் சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பெரும் தொந்தரவை அனுபவித்து வருகிறார்கள். சாலை பள்ளங்களை மூடுவதற்கு உடனடியாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன ஓட்டிகள் உயிர் பலியாவதை தடுக்க சாலை பள்ளங்கள் மூடப்பட வேண்டும் என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூடும்படி மாநகராட்சிக்கு பலமுறை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவை மாநகராட்சி மதிப்பதில்லை. இதே நிலை நீடித்தால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், என்ஜினீயர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்கள்.