பிரபல வணிக வளாகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
ரூ.42 கோடி வரி பாக்கி வைத்திருந்த பிரபல வணிக வளாகத்தில் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மடிக்கணினிகள், நாற்காலிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மல்லேசுவரம்:-
ரூ.42 கோடி வரி பாக்கி
பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் மந்த்ரி மால் எனப்படும் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகம் சார்பில் பெங்களூரு மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி முறையாக செலுத்தப்படவில்லை என தெரிகிறது. ரூ.42 கோடி வரை வரி பாக்கி இருந்தது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்தது. இதுகுறித்து வணிக வளாக நிர்வாகத்திற்கு மாநகராட்சி சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது.
அதன்பேரில் வணிக வளாக நிர்வாகம் வரி செலுத்த காசோலையை வழங்கியது. ஆனால் அந்த காசோலை வங்கி கணக்கில் பணம் இல்லை என கூறி திரும்பி வந்தது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் வணிக வளாகத்திற்கு பலமுறை நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் வணிக வளாக நிர்வாகம் அதை கண்டு கொள்ளாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று வணிக வளாக அலுவலகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
மடிக்கணினிகள் பறிமுதல்
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு மண்டல இணை கமிஷனர் யோகேஷ் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் 20 மார்ஷல்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். நேற்று காலை முதல் நடைபெற்ற சோதனையின் முடிவில் வணிக வளாக அலுவலகத்தில் இருந்த மடிக்கணினிகள், நாற்காலிகள், மேஜைகள் ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சோதனையின்போது வணிக வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பிராப்கேர் மால் நிர்வாகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
இதனால் அதன் நிர்வாக இயக்குனர் சபீர், மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாகவும் கூறினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தை பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார் சரிசெய்தனர். பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு உண்டானது.
இணை கமிஷனர்
சோதனை குறித்து மாநகராட்சி மேற்கு மண்டல இணை கமிஷனர் யோகேஷ் கூறுகையில், 'மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை மந்த்ரி மால் நிர்வாகம் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு வந்தது. இதுகுறித்து பலமுறை நோட்டீசு அனுப்பியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அரசு உத்தரவுகளை பின்பற்றி சோதனையில் ஈடுபட்டுள்ளோம்.
மேலும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். மந்த்ரி வணிக வளாகம் வரி பாக்கி செலுத்தாமல் இருப்பது இது முதல் முறை கிடையாது. இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு வரி செலுத்தாததால், வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சீல் அகற்றப்பட்டது. இதேபோல் பலமுறை அந்த வணிக வளாகம் வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட முயன்றது' என்றார்.