கள்ளக்காதலி கொலை வழக்கில் கள்ளக்காதலன்-பெண் கைது
ராமநகரில் கள்ளக்காதலி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் மற்றும் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:-
பெண் கொலை
ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா கே.பி.தாண்டா அருகே அத்தகேரி கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா பாய். இவரது கணவர் இறந்து விட்டார். இதனால் கூலி வேலை செய்து வந்ததுடன், சரோஜா பாய் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி தனது வீட்டுக்குள் சரோஜா பாய் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.
அப்போது கணவரை இழந்து வாழ்ந்து வந்த சரோஜா பாய் வீட்டுக்கு ஒரு நபர் அடிக்கடி வந்து சென்றது பற்றி போலீசாரிடம் கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த நபரை பற்றிய எந்த தகவலும் கிராம மக்களுக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து, தலைமறைவாக உள்ள அந்த நபரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இதற்கிடையில், ராமநகர் மாவட்டத்தில் உள்ள ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் அந்த நபர் கூலி வேலை செய்து வருவது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கள்ளத்தொடர்பு
உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், துமகூரு மாவட்டம் மதுகிரியை சேர்ந்த கங்கய்யா என்றும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை பிரிந்து விட்டதும் தெரியவந்தது. மேலும் மாகடி தாலுகாவுக்கு கூலி வேலைக்கு வந்த போது சரோஜா பாயுடன் கங்கய்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரது கணவர் இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக ஒரே வீட்டில் 2 பேரும் வசித்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களாவை சேர்ந்த கங்கம்மா என்பவருடன், கங்கய்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சரோஜா பாய்க்கு தெரியவந்துள்ளது. உடனே அவர், கங்கம்மாவுடன் இருக்கும் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
செல்போன் பயன்படுத்தவில்லை
இதுபற்றி கங்கம்மாவுக்கும் தெரியவந்ததால், சரோஜா பாயை கொலை செய்து விடலாம் என்று கங்கய்யாவிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 6-ந் தேதி சரோஜா பாயை, கங்கய்யாவும், கங்கம்மாவும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து, கங்கய்யா, கங்கம்மாவை மாகடி போலீசார் கைது செய்துள்ளனர்.
அதே நேரத்தில் கங்கய்யாவும், கங்கம்மாவும் செல்போன் பயன்படுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் அவர்களை கைது செய்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும், ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். கைதான 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.