பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை தடுக்க முன்னுரிமை: மத்திய ஆசிய நாடுகளின் மாநாட்டில் அஜித் தோவல் பேச்சு


பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை தடுக்க முன்னுரிமை: மத்திய ஆசிய நாடுகளின் மாநாட்டில் அஜித் தோவல் பேச்சு
x

மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்ற முதல் மாநாடு புதுடெல்லியில் இன்று நடைபெற்றது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் அஜித் தோவல் பேசியதாவது, "ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலை நம் அனைவருக்குமே மிக முக்கியமான ஒன்று. நிதியுதவி என்பது பயங்கரவாதத்தின் உயிர்நாடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவது நம் அனைவருக்கும் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பினர்களும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உதவி வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

மத்திய ஆசியாவுடனான இணைப்பு இந்தியாவிற்கு முக்கிய முன்னுரிமை. இந்த பகுதியில் ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் இணைப்பை உருவாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இணைப்பை விரிவுபடுத்தும் போது, ​​முன்முயற்சிகள் ஆலோசனை, வெளிப்படையான மற்றும் பங்கேற்புடன் இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.

ஆப்கன் விவகாரத்தில் நமக்கான முன்னுரிமைகள், முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் ஆகியவை குறித்து இந்தியாவுக்கு கவலை இருக்கிறது. இது இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல. நம் அனைவருக்குமானது.

குழப்பம் நிறைந்ததாகவும், எதிர்காலம் நிச்சயமற்றதாகவும் உள்ள நிலையில் நமது இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அமைதியான, பாதுகாப்பான, வளமான பகுதியாக மத்திய ஆசியா திகழ வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம் என்று கூறினார்.


Next Story