சிவமொக்கா மாவட்டத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை
சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
சிவமொக்கா-
சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி 100 மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சட்டசபை தேர்தல்
கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடந்தது. ஒரு சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடந்தன. ஆனால் மற்றபடி எந்த பிரச்சினைகளும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்தநிலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் போலீசார், துணை ராணுவத்தினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதேப்போல் சிவமொக்கா மாவட்டத்தில் இன்று வாக்கு எண்ணிக்ைக நடக்கிறது. வாக்கு எண்ணும் மையான சிவமொக்கா டவுன் பி.எச்.சாலையில் உள்ள அரசு சகாயாத்திரி கல்லூரியில் வாக்கு எண்ணும் எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
144 தடை உத்தரவு
வாக்கு எண்ணிக்கை நடப்பதையொட்டி பி.எச்.சாலை வழியே வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சிவமொக்கா டவுனில் இருந்து வாகனங்கள் அனைத்தும் எம்.ஆர்.எஸ் சதுக்கத்தின் வழியாக செல்ல வேண்டும்.
சன்னகிரி, சித்ரதுர்கா செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சிவமொக்கா டவுன் துங்கா பழைய மேம்பாலத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று சிவமொக்கா டவுனில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் ஆர்ப்பாட்டம், போராட்டம் , ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.