காட்டு யானை தாக்கியதில் தம்பதி படுகாயம்
மூடிகெரே அருகே பனகல்லில் காட்டுயானை தாக்கி தம்பதி படுகாயம் அடைந்தனர். காட்டு யானை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காத வனத்துறையை கண்டித்து கிராமமக்கள் போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு:-
காட்டுயானை அட்டகாசம்
சிக்கமகளூருவில் காட்டுயானைகள் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தரிகெரேயில் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த ஈரண்ணா என்பவரை காட்டுயானை தாக்கி கொன்றது.
இந்த சோகம் இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு காட்டுயானை ஒரு தம்பதியை தாக்கிய சம்பவம் பனகல் அருகே நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
ஹாசன் தம்பதி
ஹாசன் மாவட்டம் பேளூரு தாலுகா ஹகரே கிராமத்தை சேர்ந்தவர் கந்துகுசே, கூலி தொழிலாளி. இவரது மனைவி நாகவள்ளி. இருவரும் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவை அடுத்த பனகல் கிராமத்தில் உள்ள சாலை பணிகளுக்காக வந்திருந்தனர்.
இதற்காக அவர்கள் பனகல் அரசு ஆஸ்பத்திரி அருகே கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். இந்த கூடாரம் வனப்பகுதிக்கு அருகே அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
தம்பதி மீது தாக்குதல்
இந்நிலையில் நேற்று அதிகாலை காட்டுப்பகுதியில் இருந்து வந்த காட்டுயானை பனகல் கிராமத்திற்குள் புகுந்தது. பின்னர் கந்துகுேச-நாகவள்ளி தங்கியிருந்த கூடாரத்தை அந்த காட்டு யானை துவம்சம் செய்தது. அப்போது கூடாரத்தில் இருந்த நாகவள்ளி, கந்துகுசே உள்பட 3 கூலி தொழிலாளிகள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். ஆனால் காட்டுயானை விடவில்லை. அவர்களை பின்தொடர்ந்து சென்று தும்பிகையால் மடக்கி பிடித்து தூக்கி வீசி தாக்கியது. இதில் நாகவள்ளி மற்றும் கந்துகுசேவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றொரு கூலி தொழிலாளி தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் சிலர், உடனே அங்கு ஓடி வந்து காட்டுயானையை அங்கிருந்து விரட்டியடித்தனர். பின்னர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு மூடிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த காட்டுயானை அட்டகாசம் குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
கிராம மக்கள் போராட்டம்
அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றதும், பொதுமக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கடந்த 6 மாதங்களில் காட்டுயானை தாக்கி 3 பேர் இறந்துவிட்டனர். இதுவரை அந்த காட்டுயானைகள் அட்டகாசத்தை நிரந்தரமாக தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் மீண்டும் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இந்த முறை காட்டுயானை நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த காட்டுயானை தாக்குதல் சம்பவம் பனகல் கிராம மக்களிடையே தொடர்ந்து பீதியை ஏற்படுத்தியுள்ளது.