ஜஹாங்கீர்புரி வன்முறை வழக்கில் சிறையில் உள்ள ஒருவருக்கு ஜாமீன் - கோர்ட்டு உத்தரவு
ஜஹாங்கீர்புரி வன்முறை வழக்கில் சிறையில் உள்ள தப்ரேஜ் என்பவருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் செல்லும் வழியில் மற்றொரு பிரிவினருடன் மோதல் ஏற்பட்டது.
இதில் இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர். தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறியது.இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், இரு தரப்பையும் கலைந்து போக நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர்கள் மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டது. அத்துடன் போலீசாரின் வாகனம் உள்பட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அத்துடன் கலவரக்காரர் ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தார். இந்த பயங்கர வன்முறை சம்பவத்தில் 8 போலீசார் உள்பட 9 பேர் காயமடைந்தனர். அத்துடன் ஏராளமான பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
இதனையடுத்து, இந்த வன்முறை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வன்முறை வழக்கில் கைதான 14 பேரில் 12 பேருக்கு நீதிமன்றக்காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், ஜஹாங்கீர்புரி வன்முறை வழக்கில் சிறையில் உள்ள தப்ரேஜ் என்பவர் ஜாமீன் கோரி டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் மனுதாரருக்கு எதிரான விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை முடிக்க நீண்ட காலம் எடுக்கும், அதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்ற காவலில் வைத்திருப்பது எந்த நோக்கமும் இல்லை.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சில குற்றவாளிகளுக்கு டெல்லி ஐகோர்ட்டு மற்றும் செசன்சு கோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது என தெரிவித்தார். இதனையடுத்து, ஜஹாங்கீர்புரி வன்முறை வழக்கில் சிறையில் உள்ள தப்ரேஜ் -க்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.