2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் பெங்களூருவில் கடந்த ஆண்டு குற்றங்கள் குறைந்துள்ளது; போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி பேட்டி
2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் பெங்களூருவில் கடந்த ஆண்டு (2022) குற்றங்கள் குறைந்திருப்பதாக போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
குற்றங்கள் குறைவு
பெங்களூருவில் கடந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக 28 ஆயிரத்து 518 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்குகள் கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைவானதாகும். குற்ற வழக்குகள் பதிவு செய்வது அதிகரிக்கவில்லை. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால் குற்றங்கள் குறைவாகவே நடந்திருந்தது. ஆனால் கடந்த ஆண்டு கொேரானா கட்டுப்பாடுகள் இல்லாத நிலையிலும் குற்றங்கள் நடைபெறுவது குறைந்திருந்தது.
2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2022-ம் ஆண்டு குற்றங்கள் குறைந்திருந்தது. முக்கியமான குற்றங்களான கொலை, வழிப்பறி, கொள்ளை, கடத்தல், வீட்டு திருட்டு, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் கடந்த ஆண்டு குறைந்திருக்கிறது. பெரும்பாலான கொலைகள் சொந்த காரணங்களுக்காகவே நடந்திருந்தது. அதாவது குடும்ப பிரச்சினை, சொத்து பிரச்சினை, கள்ளத்தொடர்பு உள்ளிட்ட காரணங்களுக்காக நடந்திருந்தது.
17 முக்கிய கொலைகள்
மக்களை அச்சுறுத்தும் விதமாகவும், அரசியல், முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களுக்காக 17 கொலைகள் நடைபெற்றிருந்தது. அந்த 17 கொலை வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சைபர் குற்றங்கள் தொடர்பாக 9939 வழக்குகள் பதிவாகி இருந்தது. 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு கொள்ளை சம்பவங்கள் 41 சதவீதமும், வழிப்பறி வழக்குகள் 6 சதவீதமும், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் 33 சதவீதமும், வீட்டு திருட்டுகள் 31 சதவீதமும் குறைந்துள்ளது.
பெங்களூருவில் சட்டவிரோத தங்கி இருந்த 600 பேர் பிடிபட்டு இருந்தனர். அவர்களில் 34 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 50 பேர், வெளிநாட்டு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக 4100 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
153 கற்பழிப்பு வழக்குகள்
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் கடந்த ஆண்டு 153 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவற்றில் 149 வழக்குகள் காதல், திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்த பெண்கள் கொடுத்ததாகும். அதே நேரத்தில் பெங்களூரு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் கடந்த 3 ஆண்டுகளை காட்டிலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
பெங்களூருவில் போதைப்பொருட்களுக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி, கடந்த ஆண்டு 579 போதைப்பொருட்கள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குப்பதிவாகி இருந்தது. போதைப்பொருட்கள் பயன்படுத்திய 3,448 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 3,749 கிலோ கஞ்சா, 167 கிலோ பல்வேறு விதமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. அவற்றி மதிப்பு ரூ.89½ கோடி ஆகும்.
இவ்வாறு பிரதாப் ரெட்டி கூறினார்.
பேட்டியின் போது கூடுதல் போலீஸ் கமிஷனர்களான சந்தீப் பட்டீல், சந்திரசேகர் உடன் இருந்தனர்.