ரூ.18 லட்சம் கையாடல் செய்த பஞ்சாயத்து அதிகாரி மீது கிரிமினல் வழக்கு
வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ.18 லட்சம் கையாடல் செய்த கிராம பஞ்சாயத்து அதிகாரி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோலார் தங்கவயல்:
நிதி முறைகேடு
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேப்பள்ளி தாலுகா கோலூர் கிராம பஞ்சாயத்தில் இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றி வந்தவர் வெங்கடரவணப்பா. இந்த கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியிலிருந்து வெங்கடரவணப்பா பல லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த முறைகேடு குறித்து ஏற்கனவே, சிலர் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் அளித்தனர். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் கோலூர் கிராம பஞ்சாயத்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அரசு ஒதுக்கிய நிதி குறித்து தணிக்கை செய்ய தனி அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்தார்.
கிரிமினல் வழக்கு
அதன்பேரில் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கோலூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றனர். இதையடுத்து அதிகாரிகள் அரசு ஒதுக்கீடு செய்த நிதியை செலவு செய்தது குறித்த ஆவணங்களை தணிக்கை செய்தனர். அப்போது கோலூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அரசு ஒதுக்கீடு செய்த நிதியிலிருந்து பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றிய வெங்கடரவணப்பா, ரூ.18 லட்சம் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து தணிக்கை குழு அதிகாரிகள் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் பேரில் கலெக்டர் பிறப்பித்த உத்தரவின் பேரில் பாகேப்பள்ளி புறநகர் போலீசார் வெங்கடரவணா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, வெங்கடரவணப்பா பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் அவர் கோலூர் கிராம பஞ்சாயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.