இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத்தேர்வு 24-ந் தேதிக்கு தள்ளிவைப்பு தேசிய தேர்வு முகமை அறிவிப்பு


இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத்தேர்வு 24-ந் தேதிக்கு தள்ளிவைப்பு தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
x

17 மாநிலங்களில் பல தேர்வு மையங்களில் 4-ந் தேதி காலை ஷிப்ட் தேர்வு ரத்து செய்யப்பட்டன.

புதுடெல்லி,

மத்திய பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வியாண்டில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கு 2-வது கட்டமாக கடந்த 4 முதல் 6-ந் தேதி வரை பொது நுழைவுத்தேர்வு (க்யூட்) நடந்தது. இதில் பல மாநிலங்களில் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டது. 17 மாநிலங்களில் பல தேர்வு மையங்களில் 4-ந் தேதி காலை ஷிப்ட் தேர்வு ரத்து செய்யப்பட்டன. 489 மையங்களில் பிற்பகல் ஷிப்ட் தேர்வும் முடங்கியது. இதைப்போல 5-ந் தேதி 50 மையங்களிலும், 6-ந் தேதி 53 மையங்களிலும் ரத்து செய்யப்பட்டன.

இவ்வாறு ரத்து செய்யப்பட்டவர்களுக்கு வருகிற 12 முதல் 14-ந் தேதி வரை மறுதேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த நாட்களில் அதிகமான பண்டிகைகள் வருவதால், இந்த மறுதேர்வை தள்ளி வைக்குமாறு மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து ரத்து செய்யப்பட்டவர்களுக்கான க்யூட் நுழைவுத்தேர்வு வருகிற 24 முதல் 28-ந் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. இதற்காக புதிதாக ஹால்டிக்கெட் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது.


Next Story