பெங்களூருவில் தினசரி பால் உற்பத்தி 16 லட்சம் லிட்டராக உயர்வு


பெங்களூருவில் தினசரி பால் உற்பத்தி 16 லட்சம் லிட்டராக உயர்வு
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கோடைகாலத்தில் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தற்போது தினசரி பால் உற்பத்தி 16 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

பெங்களூரு:-

13 லட்சம் லிட்டராக குறைந்தது

பெங்களூருவில் கோடைகாலத்தில் பால் உற்பத்தி வெகுவாக குறைந்திருந்தது. அதாவது பெங்களூருவில் தினசரி பாலின் தேவை16 லட்சம் லிட்டருக்கும் மேல் இருந்தது. ஆனால் பசுமாடுகளுக்கு நோய் பாதிப்பு, கோடைகாலம் என்பதால் தீவன பற்றாக்குறை போன்ற காரணங்களால் பெங்களூருவில் பால் உற்பத்தி 13 லட்சம் லிட்டருக்கு கீழ் குறைந்தது. இதன்காரணமாக பெங்களூருவில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. கோடையில் மோருக்கு அதிக தேவை இருந்ததும் மற்றொரு காரணமாகும்.

இதன்காரணமாக பால் விலையை உயர்த்தாமல், பெங்களூரு பால் கூட்டமைப்பு சார்பில் பாலின் அளவை குறைக்கும் முயற்சிகள் நடந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த முடிவை பால் கூட்டமைப்பு கைவிட்டு இருந்தது. இந்த நிலையில், கோடைகாலம் முடிவடைந்த நிலையில் மாடுகளுக்கு தேவையான புற்கள் உள்ளிட்ட தீவனங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது.

16 லட்சம் லிட்டராக உயர்வு

இதனால் பெங்களூருவில் பால் உற்பத்தி 13 லட்சம் லிட்டரில் இருந்து 16 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இன்னும் சிறிது நாட்களில் இது 17 லட்சம் லிட்டராக உயர வாய்ப்புள்ளதாக பெங்களூரு பால் கூட்டமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் பால் உற்பத்தி அதிகரித்து இருப்பதால், தற்போது எந்த விதமான தட்டுப்பாடும் இன்றி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தீவன பற்றாக்குறை இல்லை

இதுகுறித்து பெங்களூரு பால் கூட்டமைப்பு (பெமுல்) தலைவர் நரசிம்மமூர்த்தி கூறுகையில், பெங்களூருவில் பால் உற்பத்தி 13 லட்சம் லிட்டரில் இருந்து 16 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் ஒரு நாளுக்கு 13 லட்சத்தில் இருந்து 13½ லட்சம் லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது. தற்போது 16 லட்சம் லிட்டர் பால் கிடைப்பதால், 2½ லட்சம் லிட்டர் பால் மூலமாக மோர் மற்றும் சீஸ் தயாரிக்கப்படுகிறது. மீதி இருக்கும் பாைல பவுடராக மாற்றப்படுகிறது.

பெங்களூருவில் கடந்த ஆண்டு கோடை முடிந்த பின்பு 19 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகி இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது 3 லட்சம் லிட்டர் பால் குறைவாக தான் உற்பத்தியாகிறது. பெங்களூருவை சுற்றி இருக்கும் பகுதிகளில் மாடுகளுக்கு தேவையான தீவனம் பற்றாக்குறை இன்றி கிடைப்பதே பால் உற்பத்தி அதிகரிக்க காரணமாகும் என்றார்.


Next Story