தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்


தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் ரவிக்குமார் கூறினார்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் ரவிக்குமார் கூறினார்.

இன்று ஓட்டு எண்ணிக்கை

தட்சிண கன்னடா மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 8 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 10-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மங்களூரு புறநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பின்னர் அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதுதொடர்பாக நேற்று மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தபால் ஓட்டுகள்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நாளை(இன்று) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது. 8 வாக்கு எண்ணும் கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கூடத்திலும் தலா 14 மேஜைகளும், தபால் ஓட்டுகளை எண்ண 5 மேஜைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு மேஜைக்கு ஒரு மேற்பாவையாளர், ஒரு கண்காணிப்பாளர் உள்பட 4 அலுவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

மொத்தமாக வாக்கு எண்ணிக்கைக்கு 112 மேஜைகளும், தபால் ஓட்டுகளை எண்ண 40 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தபால் ஓட்டுகளை எண்ண 200 பேரும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ண 336 பேரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மதுக்கடைகளை மூட உத்தரவு

வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வெற்றி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல் மதுபான கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story