விவசாயிகள் தற்கொலை செய்யாத மாவட்டம் தட்சிண கன்னடா- நளின்குமார் கட்டீல் எம்.பி. பேச்சு


விவசாயிகள் தற்கொலை செய்யாத மாவட்டம் தட்சிண கன்னடா-  நளின்குமார் கட்டீல் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் தற்கொலை செய்யாத மாவட்டம் தட்சிண கன்னடா என்று நளின்குமார் கட்டீல் எம்.பி. பேசியுள்ளார்.

மங்களூரு: விவசாயிகள் தற்கொலை செய்யாத மாவட்டம் தட்சிண கன்னடா என்று நளின்குமார் கட்டீல் எம்.பி. பேசியுள்ளார்.

நளின்குமார் கட்டீல் எம்.பி.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே ஏக்கூரில் விவசாய அறிவியல் மையத்தில், டெல்லியில் பிரதமரின் கிசான் சம்மான் திட்டம் மாநாடு நேற்றுமுன்தினம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவரும், தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல் கலந்துகொண்டு பேசியதாவது:-

மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு இதுவரை ரூ.400 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த சில விவசாயிகள் பசல் பீமா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்திற்கும் மேல் பயிர் இழப்பீடு பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் 50 சதவீதம் பயிர் சேதத்திற்கு மட்டுமே இழப்பீடு வழங்க முடியும். தற்போது அந்த வரம்பு 30 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்யாத மாவட்டம் என்றால் தட்சிண கன்னடா தான்.

அரசு ஊக்குவிக்கிறது

தட்சிண கன்னடாவில் நெல் உள்ளிட்ட சாகுபடிகள் விளைவது அரிது என்று தெரிந்தும் விவசாயிகள் அதனை விளைவித்து காட்டியுள்ளனர். தட்சிண கன்னடாவில் ஒரு காலக்கட்டத்தில் நெல்சாகுபடி குறைவாக இருந்தது. ஆனால் இந்தாண்டு 3 தாலுகாக்களில் நெல்சாகுபடி அளவு அதிகரித்துள்ளது. இங்குள்ள விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் 211 ஹெக்டர் நிலத்தில் நெல்பயிரிட்டுள்ளன. விவசாயத்தில் எந்திர முறைகளை பின்பற்றினால் நெல்சாகுபடி கைகூடும். விவசாய எந்திரங்களை வாங்குவதை அரசு ஊக்குவிக்கிறது. இதற்காக கடந்தாண்டு ரூ.6 கோடி மானியம் வழங்கப்பட்டன.

விவசாயிகள் பயன்படுத்தி...

மேலும் மாவட்டத்தில் குச்சலக்கி நெல் சாகுபடி செய்வவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த அரிசியின் தேவை அதிகரிக்கும் வகையில் பி.பி.எல். ரேஷன் கார்டுதாரர்களுக்கு குச்சலக்கி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள மத்திய தோட்டக்கலைப்பயிர்கள் ஆராய்ச்சி மையத்தில் நிலக்கடலை மஞ்சள் நோய் ஆய்வுக்கூடம் அமைக்க ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிலக்கடலை இலைப்புள்ளி நோய் குறித்த ஆராய்ச்சிக்கும் நிதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வேதவியாஸ் காமத் எம்.எல்.ஏ., துணை மேயர் பூர்ணிமா, வேளாண்மை துறை இணை இயக்குனர் சீதா, ஏக்கூர் விவசாய அறிவியல் மைய தலைவர் டி.ஜே. ரமேஷ் இருந்தனர்.


Next Story